இந்தியாவில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடந்துவரும் லீக் என்றால் அது ப்ரோ கபடி லீக் 2023 - 24. இந்த லீக்கில் மொத்தம் 12 அணிகள் களமிறங்கி சிறப்பாக விளையாடி வருகின்றன. இந்த ப்ரோ கபடி லீக்கினால் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் கபடி மீதான ஆர்வம் அதிகமாகியுள்ளது. 


ப்ரோ கபடி லீக்:


ப்ரோ கபடி லீக்கினைப் பொறுத்தவரை தமிழ் நாட்டில் உள்ள ரசிகர்களில் பெரும்பாலான ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற அணி என்றால் அது தமிழ் தலைவாஸ் அணிதான். தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் தமிழ் தலைவாஸ் அணி தனது முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இந்த சீசனை சிறப்பாகத் தொடங்கியது. ஆனால் அதன் பின்னர் தொடர்ந்து 8 போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணியின் கேம் ப்ளான் எடுபடவில்லை.


கம்பேக் தருமா தமிழ் தலைவாஸ்?


இதனால் தமிழ் தலைவாஸ் அணி புள்ளிப்பட்டியலில் 11வது இடத்தில் தேங்கிவிட்டது. இதனால், தமிழ் தலைவாஸ் அணியின் ரசிகர்கள் தொடங்கி வீரர்கள் வரை ஒட்டுமொத்தமாக அப்செட் மோடுக்குச் சென்றுவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும். ஆனால் ஒட்டுமொத்த தமிழ் தலைவாஸ் ரசிகர்கள் மத்தியிலும் இருந்த ஒரே நம்பிக்கை கடந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணி முதல் பாதியில் தொடர் தோல்விகளைச் சந்தித்து இரண்டாம் பாதியில் தொடர் வெற்றிகளைக் குவித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. அதேபோல் இந்த சீசனிலும் சிறப்பான கம்பேக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது. இந்த நம்பிக்கை இந்த சீசனிலும் தொடர முக்கிய காரணங்களில் ஒன்று என்னவென்றால் தமிழ் தலைவாஸ் அணி பல போட்டிகளில் மிகக் குறைவான வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தது. 




ரசிகர்களின் நம்பிக்கையைப் போலவே நேற்று அதாவது ஜனவரி 10ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி யு.பி. யோத்தாஸ் அணியை எதிர்த்து களமிறங்கிய தமிழ் தலைவாஸ் அணியின் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு தொடக்கம் முதல் புள்ளிகள் சேர்த்து போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது. இதனால் இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 19 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒரே போட்டியில் 44 எதிர்மறை புள்ளிகளில் இருந்த தமிழ் தலைவாஸின் தற்போதைய எதிர்மறை புள்ளிகள் 25ஆக உள்ளது. இது தமிழ் தலைவாஸ் அணியின் வெற்றிக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது மட்டும் இல்லாமல் நம்பிக்கை வீண் போகவில்லை என்றே கூறலாம். 




தமிழ் தலைவாஸ் அணி நேற்றைய போட்டியில் மட்டும் ரெய்டில் 22 புள்ளிகளும் டிஃபென்சில் 18 புள்ளிகளும் யு.பி. யோத்தாஸ் அணியை மூன்று முறை ஆல் அவுட் செய்ததால் போனஸ் புள்ளிகள் 6 என மொத்தம் 46 புள்ளிகள் எடுத்தது. தமிழ் தலைவாஸின் நேற்றைய ஆட்டம் சிறப்பாக அமைந்தது. அணி வீரர்களுக்குள் இருந்த எனர்ஜி சிறப்பாக இருந்தது. இது இதுவரை தமிழ் தலைவாஸ் அணியின் போட்டிகளின் போது இல்லை. இது பார்ப்பதற்கே ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. இந்த எனர்ஜியை தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக தக்கவைத்தாலே தமிழ் தலைவாஸ் அணியால் தொடர்ந்து வெற்றிகளை குவிக்க முடியும். தமிழ் தலைவாஸ் அணி தனது அடுத்த போட்டியில் வரும் 14ஆம் தேதி  ஹரியானா அணியை எதிர்கொள்ளவுள்ளது.