தமிழ் தலைவாஸ் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் இடையேயான 126வது போட்டியை, போட்டியை பார்க்க தவறியவர்கள் அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் என்றே சொல்லலாம். தமிழ் தலைவாஸ் அணி இந்த ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் நேற்றைய போட்டியில் இப்படி ஒரு ஆட்டத்தை விளையாடி எதிரணியை கலங்க செய்தது. 


குவிந்த சாதனைகள்: 


இதுவரை நடந்த ப்ரோ கபடி லீக்கில் ஒரே ஆட்டத்தில் 70 புள்ளிகளை கடந்த முதல் அணி சென்ற சாதனையை படைத்தது தமிழ் தலைவாஸ். மேலும், ஒரு அணிக்கு எதிராக அதிக முறை ஆல் அவுட் செய்த அணி என்ற பெருமையை பெற்றது தமிழ் தலைவாஸ். நேற்றைய பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 6 முறை ஆல் அவுட் செய்தது. இதற்கு முன், ஒரு அணிக்கு எதிராக 5 முறை ஆல் அவுட் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. 


இந்த போட்டியில் இரு அணிகளும் மொத்தமாக 111 புள்ளிகளை குவித்தது. இது ஒரு போட்டியில் திரட்டப்பட்ட அதிக புள்ளிகள் கொண்ட போட்டி என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, பாட்னா பைரேட்ஸ் மற்றும் இதே பெங்கால் வாரியார்ஸ் அணிகள் ஒரு போட்டியில் 110 புள்ளிகள் குவிக்கப்பட்டது. இதுவே இதுவரை அதிகபட்சமாக இருந்தது, தற்போது இந்த சாதனையை தமிழ் தலைவாஸ் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு இடையேயான போட்டி முறியடித்துள்ளது. பாட்னா பைரேட்ஸ் மற்றும் பெங்கால் வாரியார்ஸ் இடையேயான போட்டியில் 69-41 என்ற புள்ளிகள் அடிப்படையில் பாட்னா பைரேட்ஸ் அணி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. 


37 என்ற அபாரமான புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தமிழ் தலைவாஸ், இதுவரை நடந்த ப்ரோ கபடி லீக் ஆட்டத்தில் அதிக புள்ளிகள் குவித்த அணி என்ற சாதனையை படைத்தது. தமிழ் தலைவாஸ் அணி, பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு எதிராக நேற்று 74 புள்ளிகள் குவித்தது. இதற்கு முன்னதாக, ஏழாவது சீசனில் ஒரு போட்டியில் 69 புள்ளிகளை பெற்ற பாட்னா பைரேட்ஸ் அணி வைத்திருந்த சாதனையை தமிழ் தலைவாஸ் அணி முறியடித்தது. 


தமிழ் தலைவாஸ் அணியின் ரைடர்கள் விஷால் சாஹல் மற்றும் நரேந்தர் ஆகியோர் முறையே 19 மற்றும் 17 ரெய்டு புள்ளிகளை பெற்றனர். இதன்மூலம், ஒரு போட்டியில் ஒரே அணியை சேர்ந்த இரண்டு வீரர்கள் அதிக புள்ளிகளை பெற்றது இதுவே முதல்முறை. 






தமிழ் தலைவாஸ் படைத்த சாதனைகள்:


1) அதிக ஆல் அவுட் புள்ளிகள் (12)
2) அதிக ரெய்டு புள்ளிகள் (43)
3) ஒரே அணியில் இரண்டு ரைடர்களால் அதிக புள்ளிகள் (19) & (17)
4) முதல் பாதியில் ஒரு வீரரின் அதிக புள்ளிகள் - நரேந்தர் (10)
5) ப்ரோ கபடி லீக் வரலாற்றில் அதிக புள்ளிகள் குவித்த அணி
6) ப்ரோ கபடி லீக் 70 புள்ளிகளை எட்டிய முதல் அணி 


போட்டி சுருக்கம்: 


10வது சீசன் ப்ரோ கபடியின் கடைசி ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 74-37 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை தோற்கடித்தது.


ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பால்டன், தபாங் டெல்லி கேசி, குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ் ஆகிய 6 அணிகள் தகுதிச் சுற்றுக்கு தகுதிபெற்ற நிலையில், தமிழ் தலைவாஸ் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் ஆகிய இரு அணிகளும் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடினர். 


தமிழ் தலைவாஸ் அணியின் இளம் வீரர் நரேந்தர் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்த, 10-8 என முன்னிலை வகித்தது தமிழ் தலைவாஸ். அடுத்ததாக, தமிழ் தலைவாஸ் அணி பெங்கால் வாரியர்ஸை சூப்பராக ஆல்-அவுட் செய்தது. தொடர்ந்து நரேந்தர் மற்றும் சாஹலின் சிறப்பான ரெய்டுகளால் பெங்கால் வாரியர்ஸ் முதல் பாதியில் 18-31 என தத்தளித்தது. 


தொடர்ந்து, இரண்டாவது பாதியில் நரேந்தர் 17 புள்ளிகளையும், விஷால் சாஹல் 19 புள்ளிகளையும் குவிக்க பெங்கால் வாரியர்ஸுக்கு எதிராக 74-37 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது தமிழ் தலைவாஸ்.