இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்தவர் சுரேஷ் ரெய்னா. 2011ம் ஆண்டு உலககோப்பையை வென்ற இந்திய அணியில் முக்கிய வீரராக வலம் வந்தவர். இவர் கடந்தாண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.


சுரேஷ் ரெய்னா கடந்த 2005ம் ஆண்டு முதன்முதலாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். ராகுல் டிராவிட் கேப்டன்சியில் அறிமுகமாகிய சுரேஷ் ரெய்னா, தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் கேப்டன்சியின் கீழும் பல்வேறு போட்டிகளில் ஆடியுள்ளார்.




இந்த நிலையில், அவரிடம் நீங்கள் ஆடிய மூன்று கேப்டன்களில் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது கேப்டன்கள் என்று வரிசைப்படுத்தினால் யாருக்கு எந்த இடம் என்று வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சுரேஷ் ரெய்னாவிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா, “ஒரு கேப்டனாக, ஒரு வீரராக, ஒரு பேட்ஸ்மேனாக நான் மகிபாயுடன் ( மகேந்திர சிங் தோனி) நிறைய போட்டிகளில் ஆடியுள்ளேன். ராகுல்டிராவிட்டின் தலைமையின் கீழ் அணிக்குள் நன் ஆட்டத்தை தொடங்கினேன். நான் மற்றும் விராட் கோலி சில அற்புதமான பார்டனர்ஷிப் அமைத்துள்ளோம். அவர் சில சாதனைகளையும் படைத்துள்ளார். என்னைப் பொறுத்தவரை தோனி, டிராவிட் மற்றும் கோலி என்றுதான் கூறுவேன்.”


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


34 வயதான சுரேஷ் ரெய்னா இதுவரை 18 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 768 ரன்களையும், 226 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5 ஆயிரத்து 615 ரன்களையும், 78 டி20 போட்டிகளில் ஆடி 1604 ரன்களையும் குவித்துள்ளார். 200 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடியுள்ள சுரேஷ் ரெய்னா 5 ஆயிரத்து 491 ரன்களையும் குவித்துள்ளார். பகுதிநேர பந்துவீச்சாளராக டெஸ்ட் போட்டிகளில் 18 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 36 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 13 விக்கெட்டுகளையும், ஐ.பி.எல். போட்டிகளில் 25 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.




இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று வடிவ போட்டிகளிலும் சேர்த்து முதலில் சதமடித்த வீரர் என்ற பெருமைக்கு சுரேஷ் ரெய்னா சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. சுரேஷ் ரெய்னா அந்த பட்டியலில் தோனிக்கு முதலிடம் அளித்திருப்பது அனைவரும் எதிர்பார்த்ததே. ஏனென்றால், தோனி சுரேஷ் ரெய்னாவின் மிகவும் நெருங்கிய நண்பர். தோனி கேப்டனாக இருந்த காலகட்டத்தில் அணியின் தவிர்க்க முடியாத வீரராக சுரேஷ் ரெய்னா வலம்வந்தார்.




தோனியின் தலைமையில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008ம் ஆண்டு முதல் சுரேஷ் ரெய்னா ஆடி வருகிறார். ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணிக்கு தடை விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் மட்டுமே தோனி புனே அணிக்காகவும், சுரேஷ் ரெய்னா குஜராத் அணிக்காகவும் ஆடினர். ஐ.பி.எல். கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்று முறை கைப்பற்றியபோதும் சுரேஷ் ரெய்னா முக்கிய வீரராகவே வலம் வந்தார்.


தோனியை ரசிகர்கள் செல்லமாக தல என்றும், சுரேஷ் ரெய்னாவை ரசிகர்கள் செல்லமாக சின்ன தல என்றும் அழைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.