இலங்கை பந்துவீச்சாளர் விஷ்வா ஃபெர்னாண்டோவிற்கு மூளை அதிர்ச்சி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி சாஹுர் அகமது சவுத்ரி மைதானத்தில் கடந்த 15ம் தேதி தொடங்கியது. போட்டியின் இரண்டாம் நாளான நேற்றைய தினம் ஏஞ்செலோ மேத்யூஸுடன் பந்துவீச்சாளர், விஷ்வா ஃபெர்ணாண்டோ விளையாடிக்கொண்டிருந்தார். அப்பொது, தேநீர் இடைவேளைக்கு சற்று முன்பு வங்கதேச பந்துவீச்சாளர் ஷோரிஃபுல் இஸ்லாம் வீசிய பந்து விஷ்வாவின் தலையில் கடுமையாக பதம் பார்த்தது. எனினும், சிறிய மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு விஷ்வா தொடர்ந்து விளையாடினார்.


 



இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பின்பு, வங்கதேச அணி பேட்டிங்கைத் தொடங்கியது. நேற்றைய தினம் விஷ்வா நான்கு ஓவர்களை வீசினார். இன்று 3வது நாள் போட்டித் தொடங்கியதும் 4ஓவர்கள் பந்து வீசியிருந்தார். அப்போது அவருக்கு தலைசுற்றல் ஏற்படவே பெவிலியன் திரும்பினார். அவர் எம்ஆர்ஐ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.



விஷ்வாவிற்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் கசுன் ரஜிதா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக கடந்த டிசம்பர் 2020ல் நடைபெற்ற பாக்ஸிங் டே டெஸ்ட்டிற்குப் பிறகு தற்போது தான் அணியில் இடம் கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.




முதலாவது இன்னிங்ஸில் அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி 397 ரன்களை எடுத்துள்ளது. இலங்கை அணி தரப்பில் ஏஞ்சலோ மேத்யூஸ் அதிகபட்சமாக 199 ரன்களும், தினேஷ் சண்டிமால் 66 ரன்களும், குஷால் மெண்டில் 54 ரன்களும் எடுத்திருந்தனர். 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட்டுகளை இழந்து 318 ரன்களை எடுத்துள்ளது. தமீம் இக்பால் அதிகபட்சமாக 133 ரன்களை எடுத்துள்ளார்.