தமராக்கி கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டில் சீறிப் பாய்ந்த காளைகள்.

தென்மாவட்டங்களில் நடைபெறும் வீர விளையாட்டுப் போட்டிகள்
 
தென் மாவட்டங்களில் சேவல் சண்டை, ஆட்டுக் கிடாய் சண்டை, ஜல்லிக்கட்டு போட்டி, மஞ்சு விரட்டு, மாட்டுவண்டி பந்தையம் என ஏகப்பட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. குறிப்பாக மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. சிவகங்கையில் நடைபெறும் மஞ்சுவிரட்டு போட்டிகளை காண ஏராளமான நபர்கள் உள்ளனர். இந்நிலையில் கிராம திருவிழாவை முன்னிட்டு தமாராக்கியில் மஞ்சுவிரட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது. இதில் காளைகள் சீறிப்பாய்ந்தது.
 
பல்வேறு மாவட்டங்களில் இருந்து 16 காளைகள் களமிறக்கப்பட்டன.
 
சிவகங்கை அருகே தமராக்கி கிராமத்தில் அமைந்துள்ள கலியுக வரத ஐயனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் சிவகங்கை, மதுரை, தேனி, தஞ்சாவூர், திண்டுக்கல், விருதுநகர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 16 காளைகள் களமிறக்கப்பட்டன.
 
சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், சிறந்த காளைகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
 
காளைகளை அடக்க 112 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். ஒரு காளையை அடக்க 25 நிமிடம் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு காளைக்கும் ஒன்பது வீரர்கள் களமிறக்கப்பட்டனர். காளைகளும் மாடுபிடி வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பின் மட்டுமே மைதானத்தில் அனுமதிக்கப்பட்டனர். சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், சிறந்த காளைகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
 
மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதால் 7 வீரர்கள் காயமடைந்தனர்
 
போட்டியை தமராக்கி, குமாரபட்டி, இடையமேலூர், சாலூர், மலம்பட்டி பகுதிகளில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கண்டுகளித்தனர். மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதால் 7 வீரர்கள் காயமடைந்தனர். இவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்ப அனுப்பி வைக்கப்பட்டனர்.