சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரணாய்,கஷ்யப்,சமீர் வெர்மா உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். நேற்று நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் சிந்து, சாய்னா, பிரணாய், அஷ்மிதா உள்ளிட்டோர் வெற்றி பெற்று இருந்தனர்.
இந்நிலையில் இன்று இரண்டாவது சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் பி.வி.சிந்து நுகின் துயுவை எதிர்த்து விளையடினார். இந்தப் போட்டியில் முதல் கேமை துயு 21-19 என்ற கணக்கில் வென்றார். அடுத்து இரண்டாவது கேமை சுதாரித்து கொண்டு ஆடிய பி.வி.சிந்து 21-19 என வென்றர். அடுத்து நடைபெற்ற மூன்றாவது கேமையும் 21-18 என்ற கணக்கில் வென்றார். 19-21,21-19,21-18 என்ற கணக்கில் பி.வி.சிந்து நுகினை போராடி வீழ்த்தினார். மேலும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் பிரணாய் உலக தரவரிசையில் 4வது இடத்திலுள்ள தியன் சென் எதிர்த்து விளையாடினார். இதில் முதல் கேமை சென் 21-14 என எளிதாக வென்றார். அதன்பின்னர் சிறப்பாக விளையாட தொடங்கிய பிரணாய் இரண்டாவது கேமை 22-20 என வென்றார். இரு வீரர்களும் தலா 1 கேமை வென்று இருந்தால் மூன்றாவது கேம் விறுவிறுப்பாக சென்றது. அந்த கேமை பிரணாய் 21-18 என்ற கணக்கில் வென்றார். மேலும் உலக தரவரிசையில் நான்காம் நிலை வீரரான தியனை 14-21,22-20,21-18 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு இந்திய வீரரான மஞ்சுநாத் நுகியூனிடம் 10-21,21-18,16-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா ஹான் யுவிடம் 21-9,21-13 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். சாய்னா நேவால் இன்று இரண்டாவது சுற்றுப் போட்டியில் ஹி பிங் ஜியோவை எதிர்த்து விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்