டிரிபிள் ஜம்பிள் தேசிய சாதனையை தகர்த்து கிரீஸ் நாட்டில் நடைபெற்ற போட்டியில், மதுரையை சேர்ந்த செல்வ பிரபு திருமாறன் தங்கம் வென்றுள்ளார். ஜூனியர் பிரிவில் புதிய மைல்கல்லை எட்டிய அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.


தங்கம் வென்று அசத்தல்:


வெனிசெலியா - சானியா என்ற அமைப்பின் சார்பில் உலக தடகள வீரர்களின் காண்டினெண்டல் தொடர் என்ற பெயரில் கிரீஸ் நாட்டில், உலக தடகள போட்டிகள் கோலாகலமாக நடைபெற்றது. இதில், டிரிபிள் ஜம்ப்பிள் ஜுனியர் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற மதுரையை சேர்ந்த செல்வ பிரபு திருமாறன் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.  அதன்படி, 16.78 மீட்டர் தூரத்திற்கு தாண்டி அசத்தியுள்ளார். இறுதிப் போட்டியில் மூன்று முறை எந்த வித தவறும் இன்று தனது முயற்சியில் துல்லியமாக தாண்டினார். அதில் இரண்டாவது முயற்சியின் போது, 16.78 மீட்டர் தூரத்திற்கு தாண்டி தங்கத்தை தன் வசப்படுத்தியுள்ளார். இதன் மூலம், ஜுனியர் பிரிவில் டிரிபிள் ஜம்பில் தேசிய அளவிலான பழையை சாதனையை தகர்த்து, புதிய இலக்கை நிர்ணயித்துள்ளார்.






உலக சாம்பியன்ஷிப்பில் அசத்தல்:


முன்னதாக கடந்த ஆண்டு கொலம்பியாவில் நடந்த 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 16.15 மீட்டர் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்று  அசத்தினார் 18 வயதே ஆன செல்வ பிரபு திருமாறன். ஐரோப்பாவில் உள்ள எஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த, விக்டோர் மொரோஜோவை 2 செண்டி மீட்டர் வித்தியாசத்தில் பின்னுக்கு தள்ளி அவர் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கினார். அதைதொடர்ந்து, அண்மையில் கடந்த மே மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான தடகள போட்டியில், 16.59 மீட்டர் தூரத்திற்கு தாண்டி இருந்தார். இந்நிலையில் தனது சாதனையை தானே தகர்த்து, ஜூனியர் பிரிவில் தேசிய அளவில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.


யார் இந்த செல்வ பிரபு திருமாறன்:


மதுரை மாவட்டம் கொடிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான திருமாறன் என்பவரது மகன் தான் செல்வ பிரபு. இவர்  திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இரண்டாமாண்டு படித்து வருகிறார்.  கியூபாவை சேர்ந்த யோண்ட்ரிஸ் என்பவரது பயிற்சியின் கீழ், செல்வ பிரபு தற்போது பயிற்சி மேற்கொண்டு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.