உலக கிரிக்கெட் அரங்கில் இந்தியா மற்ற அணிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்கிறது. சச்சின் டெண்டுல்கர், தோனிக்கு பிறகு கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணியை தங்களது தோளில் சுமந்தவர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆவார்கள். 

விடைபெற்ற ரோகித், கோலி:

சச்சின் - கங்குலி, தோனி - யுவராஜ் போல இவர்கள் இருவரும் இந்திய அணியை தங்களது அபாரமான ஆட்டத்திறனால் இந்திய அணிக்கு பல்வேறு பேரும் புகழையும் பெற்றுத்தந்துள்ளனர். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் இவர்கள் இருவரும் மிகவும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு பல வரலாற்று வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளனர். 

கடந்த டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு இவர்கள் இருவரும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இந்த நிலையில், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கேப்டன் ரோகித் சர்மா அறிவித்தார். 

அதிர்ச்சியில் ரசிகர்கள்:

அவரது அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது அறிவிப்பே ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய அணியின் தூண் விராட் கோலி மற்றொரு அதிர்ச்சியை அளித்துள்ளார். அவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக பிசிசிஐ-யிடம் தனது விருப்பத்தை அறிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. 

விராட் கோலி தனது முடிவை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று பிசிசிஐ அவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஆடினாலும் அந்த தொடருக்கு பிறகு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்றே கருதப்படுகிறது. 

என்ன செய்யப்போகிறது பிசிசிஐ?

ஒரே நேரத்தில் இந்திய அணியின் இரு பெரும் தூண்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பது இந்திய அணியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. ஏனென்றால் ஐபிஎல் தொடர் மூலமாக டி20 கிரிக்கெட் போட்டிகள் ஆடுவதற்கு நூற்றுக்கணக்கான வீரர்களை தயார் செய்துள்ள பிசிசிஐ டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவதற்கு ரஞ்சியில் இருந்து சரியான வீரர்களை இந்திய அணிக்கு தேர்வு செய்யவில்லை என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டாக உள்ளது. அந்த குற்றச்சாட்டு எந்தளவு உண்மை என்பது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெளிப்படையாக தெரிந்தது. 

ஏனென்றால் டிராவிட், புஜாரா, விவிஎஸ் லட்சுமணன், வாசிம் ஜாபர், கம்பீர், ரஹானே போன்ற வீரர்களை இந்திய அணி தயார் செய்யவில்லை. இந்த நிலையில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தாங்கிப் பிடித்து வரும் விராட் கோலி மற்றும் அதிரடி பேட்ஸ்மேனான ரோகித்சர்மா இருவரது இடத்தையும் யாரை வைத்து பிசிசிஐ நிரப்பப்போகிறது? என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. ரோகித் சர்மா இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் சேவாக்கின் இடத்தையும், விராட் கோலி கிரிக்கெட்டின் கடவுள் என்று போற்றப்பட்ட சச்சின் டெண்டுல்கர் இடத்தையும் நிரப்பி வந்த நிலையில் அவர்களது இடம் யாரால் நிரப்பப்படும் என்பது மிகப்பெரிய சவால் ஆகும்.

ரஞ்சி வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா?

இந்திய அணியில் தற்போது ஜெய்ஸ்வால், சுப்மன்கில் தவிர 3 வடிவ போட்டிகளிலும் ஆடும் வீரர்கள் யாருமே இல்லை. தொலைநோக்குப் பார்வையுடன் இந்திய டெஸ்ட் அணியை கட்டமைக்க வேண்டியது அவசியம் ஆகியுள்ளது. இதனால், ரஞ்சி கிரிக்கெட்டில் இருந்து திறமையான வீரர்களை இந்திய அணிக்குள் கொண்டு வர வேண்டிய நேரமும் பிசிசிஐக்கு உருவாகியுள்ளது.