டென்னிஸ் உலகில் ஜாம்பவான் வீரர் ரோஜர் ஃபெடரர் தனது கடைசி லாவர் கோப்பை தொடரில் தோல்வியுற்று கண்ணீருடன் ஓய்வுபெற்ற தருணம் பார்ப்போரை கண்ணீர் மல்க செய்தது. 






சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் ஃபெடரர் கடந்த 21 ம் தேதி லாவர் கோப்பை தொடருக்கு பிறகு தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த செய்தி அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, நேற்று லாவர் கோப்பை தொடரில் ஐரோப்பா அணிக்காக ஃபெடரர், நடால் ஆகியோர் டீம் வேர்ல்ட் பிரான்சிஸ் டியாஃபோ மற்றும் ஜாக் சாக் ஆகியோரை எதிர்கொண்டனர். விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் ஃபெடரர், நடால் 6-4, 6-7 (2/7), 9-11 என்ற செட் கணக்கில் டீம் வேர்ல்ட் பிரான்சிஸ் டியாஃபோ மற்றும் ஜாக் சாக்விடம் தோல்வியடைந்தது. 


இதையடுத்து 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்று கெத்துகாட்டிய 41 வயதான ரோஜர் ஃபெடரர் கண்ணீருடன் டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்கு பிறகு கண்ணீர் மல்க பேசிய ஃபெடரர், “இது ஒரு அற்புதமான நாள். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், சோகமாக இல்லை. இங்கே இருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. நான் என் ஷுக்களை இன்னொரு முறை கட்டி மகிழ்ந்தேன். எல்லாம் இன்றுடன் கடைசியாக முடிந்தது. இங்குள்ள அனைவரும், அனைத்து ஜாம்பவான்களும் எனது நன்றி.






இது எனக்கு ஒரு கொண்டாட்டமாக இருக்கிறது. கடைசியில் இப்படித்தான் உணர வேண்டும் என்று நான் விரும்பினேன். நான் எதிர்பார்த்தது இதுதான். தனது வாழ்க்கையில் சரியான பயணத்தை மேற்கொண்டேன். அதற்கு உறுதுணையாக இருந்த எனது மனைவிக்கு மிகப்பெரிய நன்றி. அவர் என்னை நீண்ட காலத்திற்கு முன்பே விளையாட விடாமல் நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அவர் என்னை தொடர்ந்து விளையாட அனுமதித்தாள். ஆச்சரியமாக இருக்கிறது. நன்றி” என்று தெரிவித்தார். 


போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, 17, 500 பேருக்கு முன்பு பெடரர் மற்றும் நடால் எழுந்து நின்று கைதட்டி ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுத்தனர். தொடர்ந்து தாங்கள் எதிர்த்து விளையாடும் வீரர்களுடன் நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். தொடர்ச்சியாக ரோஜர் ஃபெடரரை கெளரவம் செய்யும் விதமாக பெரிய திரையில் அவர் குறித்தான பிரிவுவிடை வீடியோவும் ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்வின்போது, ஃபெடரரின் தாய், மனைவி உள்ளிட்ட கண்ணீர் பொங்க பெடரருக்கு மரியாதை செலுத்தினர். 






தொடர்ந்து, ஃபெடரர் ஓய்வு பெறும்போது நடாலும் அழுத வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இதுவரை ஃபெடரரும் ரஃபேலும்...


டென்னிஸ் களத்தில் மிகச் சிறந்த ஆட்டங்களில் எப்போதும் ரோஜர் ஃபெடரர் மற்றும் நடால் ஆகியோருக்கு எதிரான போட்டி இருக்கும். இவர்கள் இருவரும் டென்னிஸ் களத்தில் 40 முறை எதிராக மோதியுள்ளனர். அவற்றில் நடால் 24 முறையும், ஃபெடரர் 16 முறையும் வென்றுள்ளனர். குறிப்பாக கடைசியாக இவர்களுக்கு இடையே நடைபெற்ற 8 போட்டிகளில் 7ல் ஃபெடரர் வெற்றி பெற்றுள்ளார். 2019ஆம் ஆண்டு விம்பிள்டன் அரையிறுதியில் கடைசியாக ஃபெடரர் நடால் மோதியிருந்தனர். அதில் ரோஜர் ஃபெடரர் 4 செட்களில் போராடி போட்டியை வென்று இருந்தார். அதன்பின்னர் இருவரும் டென்னிஸ் களத்தில் சந்திக்கவில்லை. இவர்கள் இருவருக்கும் இடையே நடைபெறும் போட்டி எப்போதும் டென்னிஸ் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கும். 


யார் இந்த ரோஜர் ஃபெடரர்..? 


ரோஜர் ஃபெடரர் தன்னுடைய 24 ஆண்டுகால டென்னிஸ் வாழ்க்கையில் சுமார் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று அசத்தியுள்ளார். அத்துடன் 310 வாரங்கள் தொடர்ந்து டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தியிருந்தார். அதிக முறை விம்பிள்டன் பட்டத்தை வென்ற வீரர் ரோஜர் ஃபெடரர் தான். இவர் 8 முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.