இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் ரமேஷ் பவார். இவரின் நியமனத்தை எப்படி கையாள போகிறார் மித்தாலி ராஜ் என்பதே பலர் மத்தியில் எழும் கேள்வி ?


அப்படி என்ன இருவருக்கும் முன்விரோதம் ?


ஏற்கனவே 2018-ஆம் ஆண்டில் இடைப்பட்ட காலத்திற்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்தவர் ரமேஷ் பவார். அப்போது 2018 டி20 உலகக் கோப்பை வரையில் ரமேஷ் பவாரின் பயிற்சியாளர் காலம் நீட்டிக்கப்பட்டது. இந்திய அணியில் டி20 போட்டிகளுக்கு கேப்டனாக ஹர்மான்ப்ரீத் கவுர், ஒருநாள்/டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக மித்தாலி ராஜ் பொறுப்பு வகிக்கின்றனர். சிறப்பாக 2018 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய மகளிர் அணி. இங்கிலாந்து அணியுடனான மிக முக்கியமான அரையிறுதி போட்டி, மித்தாலி ராஜ் ஆடும் 11ல் இருந்து உட்காரவைக்கப்பட்டார். வெடித்தது ரமேஷ் பவார் vs மித்தாலி ராஜ் இடையே பூகம்பம்.


சரமாரியான விமர்சனங்களை முன்வைத்தனர் இருவரும். இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு விளக்கம் அளித்த மித்தாலி  ராஜ் "தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் அழிக்க நினைக்கிறார் ரமேஷ் பவார்,மிக சோர்வாகவும், நிராகரிக்கப்பட்டது போல் நான் உணர்கிறேன்" என்றார்..


அதேநேரம் ரமேஷ் பவாரோ "அணியின் ஒற்றுமையை சீர்குலைக்கிறார் மித்தாலிராஜ், ஓபனிங் தரவில்லை என்றால் தொடருக்கு நடுவிலேயே நான் ஓய்வு பெறுவேன் என மிரட்டுகிறார்" என்றார்..


இந்த சர்ச்சைக்கு பின் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ரமேஷ் பவார் விடுவிக்கப்பட்டார், அவரின் பயிற்சி காலம் நீடிக்கப்படவில்லை..


அதன் பின் மகளிர் கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக W.V ராமன் நியமிக்கப்பட்டார். டி20 உலகக்கோப்பை இறுதி போட்டி வரை இந்திய அணியை அழைத்து சென்ற நிலையிலும், சொந்த மண்ணில் நடைபெற்ற தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது WV ராமனின் பயிற்சியாளர் பதவிக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இந்நிலையில் மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிசிசிஐ விளம்பரத்தை அளித்திருந்தது. அதில் 35 பெயர் மகளிர் கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்தனர்.


சுலக்சனா நாயக், மதன்லால், ருத்ர பிரதாப்சிங் அடங்கிய மூவர் குழு இதற்கான நேர்காணலை நடத்தியது, அதன் முடிவில் முன்னாள் இந்திய பந்து வீச்சாளர் ரமேஷ் பவார் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


ரமேஷ் பவார் இந்திய அணிக்காக 2 டெஸ்ட் போட்டிகள், 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். மேலும் முன்பு இவர் பயிற்சிக் காலத்தில் இந்திய மகளிர் அணி டி20 போட்டிகளில் அரையிறுதிக்கு சென்றதுடன், தொடர்ச்சியாக 14 டி20 போட்டிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அண்மையில் மும்பை சீனியர் அணி இவரது பயிற்சியின் கீழ் விஜய் ஹசாரே கோப்பையை வென்றது, மேலும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் இவர் இருந்து வந்தார்.


இந்நிலையில் மீண்டும் இந்திய அணிக்கு ரமேஷ் பவார் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருதலை பட்சமாக செயல்படுகிறார் ரமேஷ் பவார் என்ற குற்றசாட்டை கடந்த காலத்தில் தெரிவித்து இருந்த இந்திய ஒருநாள்/டெஸ்ட் அணிகளின் கேப்டன் மித்தாலி ராஜ் என்ன செய்ய போகிறார் ? இருவரும் இனைந்து செயல்படுவார்களா, அல்லது மீண்டும் வெடிக்க  போகிறதா சர்ச்சை ? பொறுத்திருந்து பார்ப்போம் ....