ஐபிஎல் தொடர் கடந்த 9-ஆம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக போட்டிகள் அனைத்தும் சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்று வருகின்றன. தற்போதுவரை எல்லா அணிகளும் தலா 4 போட்டிகளில் விளையாடியுள்ளன.
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் 2021-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ஆர்ச்சர் விளையாட மாட்டார் என்று தெரிவித்துள்ளது.
ஆர்ச்சர் சில மாதங்களுக்கு முன்பு முழங்கை பிரச்னைக்காக ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதில் ஓய்வு எடுத்து வருகிறார். இதனால் தற்போது ஐபிஎல் தொடரில் இவர் பங்கேற்கவில்லை. எனினும் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் இவர் ராஜஸ்தான் அணிக்கு களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது முழு ஐபிஎல் தொடரிலும் இருந்து இவர் விலகியுள்ளது ராஜஸ்தான் அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்பட்டுத்தியுள்ளது.
ஏனென்றால் ஜோஃப்ரா ஆர்ச்சர் 2018-ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். 2018-இல் 15 விக்கெட்களும், 2019-இல் 11 விக்கெட்களும், 2020 தொடரில் 20 விக்கெட்களும் இவர் வீழ்த்தியிருந்தார். எனவே ராஜஸ்தான் அணியின் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக இவர் வலம் வந்தார். தற்போது இவரின் விலகல் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை மிகவும் பலவீனம் ஆக்கியுள்ளது.
ஏற்கெனவே முதல் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ராஜஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் நாடு திரும்பியுள்ளார். இவர் மீண்டும் ஐபிஎல் தொடரில் களமிறங்குவது சந்தேகமாக உள்ளது. மேலும் பயோபபுள் முறையால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக மற்றொரு இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் நாடு திரும்பியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை நான்கு போட்டியில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. அத்துடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.