Rafael Nadal: ஃபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் 14 முறை சாம்பியனான, ரஃபேல் நடால் நடப்புதொடரின் முதல் சுற்றிலேயே அலெக்சாண்டர் ஜ்வெரெவ்விடம் தோல்வியுற்றார். 


ரஃபேல் நடால் அதிர்ச்சி தோல்வி:


ஃபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், நட்சத்திர வீரரான ரஃபேல் நடால் முதகல் சுற்றிலேயே தோல்வியுற்றார். அலெக்சாண்டர் ஜ்வெரெவ்விற்கு எதிரான போட்டியில், 3-6, 6-7, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியுற்று தொடரில் இருந்து வெளியேறினார். ஃபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் 14 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள நடால், முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களில் ஃபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் 115 போட்டிகளில் விளையாடிய நடால், வெறும் 3 முறை மட்டுமே தோல்வியுற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.


களிமண் மைதானங்களின் ராஜா:


களிமண் மைதானங்களில் நடைபெறும் டென்னிஸ் போட்டிகளில், கற்பனை செய்ய முடியாத உயரத்த்தை நடால் எட்டியுள்ளார். நீண்ட காலமாக ஃபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர்ன் முடிசூடா மன்னராக திகழ்ந்தார். 2023 இல் இடுப்பு அறுவை சிகிச்சை செய்துகொண்டு 15 மாத ஓய்விற்குப் பிறகு, கடந்த மார்ச் மாதம் அவர் பயிற்சியை தொடங்கினார். இந்நிலையில் 38 வயதான நடால் விளையாடிய முதல் போட்டியே அவருக்கு தோல்வியாக அமைந்துள்ளது. ஃபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின், முதல் சுற்றில் நடால் தோல்வியுற்றது இதுவே முதல்முறையாகும்.


விடைபெறுகிறாரா நடால்?


போட்டிக்கு பிறகு பேசிய நடால்,இது நம்பமுடியாதது, நான் பேசுவது கடினம். உங்கள் அனைவருக்கும் முன்னால் நான் இருப்பது இது கடைசி முறையாக இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. உண்மயை சொல்லப் போனால், எனக்கு 100% உறுதியாக தெரியவில்லை. ஆனால் இது கடைசி போட்டியாக இருந்தால், நான் அதை ரசித்தேன். இன்று நான் கொண்டிருக்கும் உணர்வுகளை வார்த்தைகளில் விவரிப்பது கடினம், ஆனால் நான் வெற்றி பெற்ற இடத்தில் நான் உணர்ந்த விதத்தில், மக்களிடமிருந்து அன்பை உணருவது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது" என தெரிவித்துள்ளார். இதனால் டென்னிஸ் உலகில் களிமண் மைதானங்களின் ராஜா என போற்றபடும் நடால், சர்வதேச  போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவத போன்று ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.