Tamil Thalaivas:  ப்ரோ கபடி லீக் சீசன் 10 இன் 60வது போட்டியில் இன்று புனேரி பல்தான் அணி, மும்பையில் உள்ள நேஷனல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆஃப் இந்தியா ஸ்டேடியத்தில் தமிழ் தலைவாஸ் அணியை எதிர்த்து களமிறங்கியது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 08:00 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் புனேரி பல்தான் அணி தமிழ் தலைவாஸ் அணியை 26 - 29 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது. 


புனேரி பல்தான் vs தமிழ் தலைவாஸ்:


புனேரி பல்தான் - அபினேஷ் நடராஜன், அஸ்லாம் இனாம்தார், கௌரவ் காத்ரி, மோஹித் கோயத், பங்கஜ் மோஹிதே, சங்கேத் சாவந்த், முகமதுரேசா சியானே 


தமிழ் தலைவாஸ் - சாஹில் குலியா, எம். அபிஷேக், மோஹித், அஜிங்க்யா பவார், நரேந்தர், நிதின் சிங், சாகர் 


கடந்த 3ம் தேதி உபி யோதாஸ் அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு புனேரி பல்தான் அணி இன்றைய போட்டியில் களமிறங்கியது. மேலும் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள வலிமையான அணியான புனேரி அணியை எதிர்த்து புள்ளிப்பட்டியலில் 11வது இடத்தில் தனது மூன்றாவது வெற்றிக்காக போராடிக்கொண்டு இருக்கும் தமிழ் தலைவாஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. 


தனது முதல் ரைடில் தமிழ் தலைவாஸ் அணி 3 புள்ளிகள் எடுத்து அசத்தியது. இன்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணிக்கு அமைந்த முதல் மற்றும் கடைசி சூப்பர் ரைடு அதுதான். அதன் பின்னர் ரைடு சென்ற தமிழ் தலைவாஸ் ப்ளேயர்களை புனேரி அணியின் டிஃபெண்டர்ஸ் கொத்தாக வெளியேற்றி வந்தனர். இதனால் புனேரி அணியின் புள்ளிகளும் உயர்ந்தது. அதேநேரத்தில் தமிழ் தலைவாஸ் அணியின் டிஃபெண்டர்ஸ் சிறப்பாக செயல்பட்டு தமிழ் தலைவாஸ் அணியை தொடர்ந்து முன்னிலையில் இருக்கச் செய்தனர். முதல் பாதி ஆட்டத்தின் முதல் 10 நிமிடங்கள் முடியும்போதுதான் தமிழ் தலைவாஸ் அணி 7 புள்ளிகளுடனும் புனேரி அணி 6 புள்ளிகளுடனும் இருந்தது. முதல் 10 நிமிடங்களுக்குப் பின்னர் தமிழ் தலைவாஸ் அணியை விட புனேரி அணி அதிக புள்ளிகள் எடுத்து முன்னிலை வகிக்கத் தொடங்கியது. 






முதல் பாதி முடியும்போது தமிழ் தலைவாஸ் அணியின் சார்பில் களத்தில் 2 வீரர்கள் மட்டுமே இருந்தனர். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய புனேரி அணி தமிழ் தலைவாஸ் அணியை ஆல் அவுட் செய்தது. தமிழ் தலைவாஸ் அணி தரப்பில் ரெய்டர்கள் தாங்கள் திட்டமிட்டதை செயல்படுத்த முடியவில்லை என்றாலும் டிஃபெண்டர்ஸ் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு புள்ளிகள் பெற்றுக்கொடுத்தனர். 


இறுதியில் தமிழ் தலைவாஸ் அணி 26 புள்ளிகளும் புனேரி பல்தான் அணி 29 புள்ளிகளும் எடுத்தது. இதனால் புனேரி அணி 3 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் புனேரி அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. தமிழ் தலைவாஸ் அணி 11வது இடத்தில் உள்ளது.