இந்திய கபடி ரசிகர்களுக்கு பெரிய விருந்து அளிக்கும் ப்ரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் நாளை முதல் தொடங்க உள்ளது. 12 அணிகள் களமிறங்கும் இந்தத் தொடர் நாளை முதல் டிசம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது. இந்த முறை ப்ரோ கபடி லீக் தொடருக்கு முன்பாக வீரர்கள் ஏலம் நடைபெற்றது. அதில் பல வீரர்கள் எடுக்கப்பட்டனர்.
இந்நிலையில் இம்முறை புதிய வீரர்களுடன் தமிழ் தலைவாஸ் அணி களமிறங்க உள்ளது. 9வது சீசனிற்கு தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக பவன் ஷெராவத் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை.
ப்ரோ கபடியில் தமிழ் தலைவாஸ்:
ப்ரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி 2017ஆம் ஆண்டு முதல் ப்ரோ கபடியில் பங்கேற்று வருகிறது. 2017ஆம் ஆண்டு முதல் முறையாக ப்ரோ கபடி 5வது சீசனில் களமிறங்கியது. அதில் தமிழ் தலைவாஸ் அணி 22 போட்டிகளில் 6 வெற்றி மட்டும் பெற்று 6 வது இடத்தை பிடித்தது. அதன்பின்னர் 2018ஆம் ஆண்டு ப்ரோ கபடி சீசனில் 22 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி மட்டுமே பெற்று மீண்டும் 6வது இடத்தை பிடித்தது.
2019ஆம் ஆண்டு 7வது சீசனில் 22 போட்டிகளில் 4 வெற்றி பெற்று கடைசி(12வது) இடத்தை பிடித்தது. அதைத் தொடர்ந்து கடந்த ப்ரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 22 போட்டிகளில் 5 மட்டும் பெற்று 11வது இடத்தை பிடித்தது. இதுவரை தமிழ் தலைவாஸ் ப்ரோ கபடி லீக் வரலாற்றில் அதிகபட்சமாக 6வது இடத்தை பிடித்துள்ளது. கடைசி இரண்டு ப்ரோ கபடி லீக் தொடர்களில் தமிழ் தலைவாஸ் கடைசி இரண்டு இடங்களில் வந்தது. இதனால் இந்த முறையாவது தமிழ் தலைவாஸ் முதல் 5 இடங்களுக்குள் வருமா என்ற ஏக்கத்துடன் ரசிகர்கள் உள்ளனர்.
இம்முறை ப்ரோ கபடி லீக் பெங்களூரு, புனே மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. லீக் சுற்றின் முதல் பாதி பெங்களூருவிலும், இரண்டாவது பாதி புனேவிலும் நடைபெற உள்ளது. அதன்பின்னர் இறுதி கட்ட போட்டிகள் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளன. இம்முறை ஏலம் நடைபெற்று பல்வேறு அணிகளில் வீரர்கள் மாறியுள்ளதால் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அத்துடன் ஒரு சில அணிகள் புதிய கேப்டன்களுடன் களமிறங்க உள்ளன.