மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் ப்ரோ கபடி லீக் சீசன் 10 ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும் பட்னா பைரேட்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி சென்னையில் உள்ள நேரு ஸ்டேயத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 


இந்த போட்டி குறித்த நேரத்தின்படி 8 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியின் முதல் ஆதிக்கத்தில் தமிழ் தலைவாஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதி ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியும் பட்னா பைரேட்ஸ் அணியும் சரி சமமாக புள்ளிகள் சேர்த்து வந்தது. முதல் பாதி ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி பட்னா அணியை ஒரு முறை ஆல் - அவுட் செய்தது. முதல் பாதி ஆட்டம் முடிந்த போது பட்னா அணி 21 புள்ளிகளும் தமிழ் தலைவாஸ் அணி 20 புள்ளிகளும் எடுத்திருந்தது. 


இதனால் தமிழ் தலைவாஸ் அணி இரண்டாம் பாதியில் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது முதல் தமிழ் தலைவாஸ் அணியை பட்னா அணியை ஆதிக்கம் செலுத்தியது. இதனால் தமிழ் தலைவாஸ் அணியால் பட்னா அணியின் புள்ளிகளுக்கு அருகில் செல்லவே முடியவில்லை. 


இது மட்டும் இல்லாமல் தமிழ் தலைவாஸ் அணியை பட்னா அணி இரண்டாம் பாதியில் இரண்டு முறை ஆல் -அவுட் செய்தது. இதனால் பட்னாவின் புள்ளுகள் எங்கோ சென்று விட்டது. தமிழ் தலைவாஸ் அணி தரப்பில் சொதப்பலான டிஃபெண்டிங் இருந்ததால் அதிகப்படியான புள்ளிகளைக் கொடுத்தது மட்டும் இல்லாமல், வீரர்களையும் இழக்க வேண்டி இருந்தது. இறுதியில் தமிழ் தலைவாஸ் அணியை பட்னா பைரேட்ஸ் அணி 46 -33 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது. இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி எடுத்த 33 புள்ளிகளில் 21 புள்ளிகள் ரைய்டு சென்று எடுத்தது. ஆனால் பட்னா அணி ரைய்டு சென்று எடுத்த புள்ளிகள் மட்டும் 29 புள்ளிகள். பட்னா அணியின் இந்த புள்ளிகள் என்பது தமிழ் தலைவாஸ் அணியின் ஒட்டுமொத்த புள்ளிகளை விடவும் 4 புள்ளிகள் மட்டுமே குறைவு. 


இந்த போட்டியில் தோல்வியைத் தழுவியதால் தமிழ் தலைவாஸ் அணி புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் 11வது இடத்தில் உள்ளது. 4 ஆண்டுகளுக்குப் பின்னர் சொந்த மண்ணில் களமிறங்கிய தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கபப்ட்ட நிலையில் தோல்வியைச் சந்தித்தது அணி நிர்வாகம் தொடங்கி ரசிகர்கள் வரை அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் தலைவாஸ் அணிக்கு நாளை அதாவது டிசம்பர் 23ஆம் தேதி ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.