ப்ரோ கபடி லீக் சீசன் 10ன் 88வது ஆட்டத்தில் ஜனவரி 24ம் தேதியான இன்று ஹைதராபாத்தில் உள்ள கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது இந்திய நேரப்படி இரவு 09:00 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 


கடந்த போட்டியில் இரு அணிகளும் எப்படி..? 


கடந்த ஜனவரி 22 ம் தேதி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்விக்குப் பிறகு தெலுங்கு டைட்டன்ஸ் இந்தப் போட்டியில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று களமிறங்குகிறது. அந்த ஆட்டத்தில் 30-37 என்ற கணக்கில் தோல்வியடைந்தது தெலுங்கு டைட்டன்ஸ் அணி. ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் 13வது தோல்வி இதுவாகும். 


மறுபுறம், ஜனவரி 21ம் தேதி தமிழ் தலைவாஸ் தனது கடைசி ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணியை சந்தித்தது. இதில், தமிழ் தலைவாஸ் அணி 45-28 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. 


தெலுங்கு டைட்டன்ஸ் vs தமிழ் தலைவாஸ் இதுவரை நேருக்கு நேர்: 


ப்ரோ கபடி லீக் வரலாற்றில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி இதுவரை 13 முறை தமிழ் தலைவாஸ் அணியை எதிர்கொண்டுள்ளது. இதில், அதிகபட்சமாக தமிழ் தலைவாஸ் 7 முறை வெற்றி பெற்று முன்னணியில் உள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் 5 முறை வெற்றி பெற்ற நிலையில், ஒரே ஒரு போட்டி மட்டும் டையில் முடிவடைந்துள்ளது. 


15 போட்டிகளுக்குப் பிறகு ப்ரோ கபடி லீக் சீசன் 10 புள்ளிகள் பட்டியலில் தெலுங்கு டைட்டன்ஸ் 12வது இடத்தில் உள்ளது. இதுவரை 2 முறை வெற்றி பெற்று 13ல் தோல்வி அடைந்து 16 புள்ளிகளை குவித்து கடைசி இடத்தில் உள்ளது. 


அதேபோல், தமிழ் தலைவாஸ் 30 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. 5 வெற்றி, 9 தோல்வியுடன் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.


தெலுங்கு டைட்டன்ஸ் vs தமிழ் தலைவாஸ் சிறந்த வீரர்கள்:


தெலுங்கு டைட்டன்ஸ்


14 போட்டிகளில் 132 ரெய்டு புள்ளிகளை குவித்த பவன் செஹ்ராவத் இந்த சீசனில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் முதன்மை ரெய்டராக ஜொலிக்கிறார். அதேபோல், தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் டிபென்ஸ் பிரிவில் முக்கியமானவராக சந்தீப் துல் இருக்கிறார். இவர் இந்த சீசனில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 35 டிபென்ஸ் புள்ளிகளைப் பெற்றுள்ளார்.


தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் சஞ்சீவி எஸ், இதுவரை 35 புள்ளிகளை குவித்துள்ள நிலையில் கவனிக்க வேண்டிய வீரராக இருக்கிறார். 


தமிழ் தலைவாஸ்


சீசன் 10ல் தமிழ் தலைவாஸ் அணிக்காக நரேந்தர் டாப் ரெய்டராக இருந்து வருகிறார், இவர் இந்த சீசனில் இதுவரை 13 போட்டிகளில் 8 டூ ஆர் டை ரெய்டு புள்ளிகள் உட்பட 100 ரெய்டு புள்ளிகளை குவித்துள்ளார்.


கேப்டன் சாகர் 13 ஆட்டங்களில் 50 டிபென்ஸ் புள்ளிகளைக் குவித்ததன் மூலம் அணியின் சிறந்த டிபெண்டராக இருக்கிறார்.


பிகேஎல்-லில் இன்று படைக்கவிருக்கும் மைல்கற்கள்:


தமிழ் தலைவாஸின் அஜிங்க்யா பவார் பிகேஎல் சீசன் 10 இல் 100 ரெய்டு புள்ளிகளைப் பெற 3 புள்ளிகள் மட்டுமே தேவையாக உள்ளது. தற்போது 97 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.


இதற்கிடையில், தெலுங்கு டைட்டன்ஸின் ரஜ்னிஷ் தனது பிகேஎல் வாழ்க்கையில் 200 ரெய்டு புள்ளிகளை பெற 6 ரெய்டு புள்ளிகள் மட்டுமே தேவையாக உள்ளது.