கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு ஸ்டேடியத்தில் ப்ரோ கபடி லீக் சீசன் 10ன் 120வது போட்டியில் தபாங் டெல்லி அணியும், தமிழ் தலைவாஸ் அணியிம் மோத இருக்கின்றன. 


இந்த சீசனில் தபாங் டெல்லி 20 போட்டிகளில் 69 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இருப்பினும், முந்தைய தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிரான போட்டியில் தபாங் டெல்லி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. இன்னும், தபாங் டெல்லி அணிக்கு இரண்டு போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் முந்தி செல்ல கடுமையாக போராடும். தற்போது புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள தபாங் டெல்லி , தனது 21வது போட்டியில் விளையாடவுள்ளது.


அதேநேரத்தில், தமிழ்தலைவாஸ் அணி தனது ப்ரோ கபடி லீக்கின் 21வது போட்டியில் இன்று விளையாடுகிறது. இதுவரை இந்த சீசனில் 12 போட்டிகளில் தோல்வியடைந்து 8 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று புள்ளிகள் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. ஏற்கனவே, பிளே ஆஃப் சுற்றை இழந்த தமிழ்தலைவாஸ் அணி இனி வரும் போட்டிகளில் வெற்றிபெற்று ஆறுதல் பரிசை பெற விரும்பும். 


இரு அணிகளும் கடந்த போட்டிகளில் எப்படி..?


தமிழ் தலைவாஸ் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் 3ல் தோல்வியடைந்துள்ளது. இந்த அணி கடைசியாக புனேரி பல்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடி (56-29) என்ற கணக்கில் மோசமான தோல்விய சந்தித்தது. அதேபோல், தபாங் டெல்லி அணியும் தனது கடைசி ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியிடம் 22-27 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.


இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர்: 


ப்ரோ கபடி லீக் வரலாற்றில் தபாங் டெல்லி மற்றும் தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 9 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. இதில் அதிகபட்சமாக தபாங் டெல்லி 5 போட்டிகளிலும், தமிழ் தலைவாஸ் அணி 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2 போட்டி டிராவில் முடிந்துள்ளது. 


விளையாடிய போட்டிகள் - 9


தபாங் டெல்லி வென்ற போட்டிகள் - 5


தமிழ் தலைவாஸ் வென்ற போட்டிகள் - 2


கடந்த 3 போட்டிகளிலும் இரு அணிகளும் நேருக்குநேர்: 


தமிழ் தலைவாஸ் தனது கடைசி மூன்று ப்ரோ கபடி லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லிக்கு எதிராக இரண்டு வெற்றிகள் மற்றும் ஒரு போட்டியை டிரா செய்துள்ளது. 


இந்த சீசனில் இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 42-31 தபாங் டெல்லி அணிக்கு எதிராக அபார வெற்றிபெற்றது. அந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியின் அஜிங்க்யா பவார் 21 புள்ளிகளை பெற்று அசத்தினார். 


கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்: 


தபாங் டெல்லி: 


அஷு மாலிக், மோஹித், விக்ராந்த், நவீன் குமார் (கேப்டன்), மீது சர்மா, யோகேஷ், ஆஷிஷ்


தமிழ் தலைவாஸ்: 


சாகர் ரதி (கேப்டன்), சாஹில், மோஹித், எம். அபிஷேக், ஹிமான்ஷு, அஜிங்க்யா பவார், நரேந்தர் ஹோஷியார்.


போட்டியை எங்கு, எப்போது பார்க்கலாம்..? 


தபாங் டெல்லி மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரடியாக கண்டுகளிக்கலாம். அதேபோல், ஹாட்ஸ்டாரில் நேரடியாக மொபைல் மற்றும் லேப்டாப்பில் காணலாம். 


நேரம் - இரவு 8:00 மணி


ஸ்ட்ரீமிங்- ஸ்டார் ஸ்போர்ட்ஸ்/ டிஸ்னி+ ஹாட்ஸ்டார்.