Praggnanandhaa: 2024 டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் உலக சாம்பியனான டிங் லிரனை வீழ்த்தியதன் மூலம்,  பிரக்ஞானந்தா தேசிய தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.


தரவரிசையில் முதலிடம் பிடித்த பிரக்ஞானந்தா:


இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, வெறும் 18 வயதிலேயே நாட்டின் நம்பர் ஒன் செஸ் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதுவும் புகழ்பெற்ற விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி அவர் இந்த அந்தஸ்தை பெற்றுள்ளார். செஸ் போட்டிகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக கருதப்படும் டாடா ஸ்டீல் செஸ் போட்டியில்,  நடப்பு உலக சாம்பியனான டிங் லிரனை வீழ்த்தியதன் மூலம், இந்த வியக்கத்தக்க சாதனையை பிரக்ஞானந்தா செய்து முடித்துள்ளார்.






இரண்டாவது வீரர்:


பிரக்ஞானந்தாவின் வெற்றி தனிப்பட்ட மைல்கல்லாக மட்டுமல்லாமல், இந்திய சதுரங்கத்தில் ஒரு புதிய சகாப்தத்தையும் குறிக்கிறது. தன்னை விட கிட்டத்தட்ட 200 புள்ளிகள் அதிகம் பெற்று உலக தரவரிசையில் கோலோச்சும் வலுவான டிங்கை  விழ்த்தியதன் மூலம், தனது அபாரமான திறமை என்ன என்பதை பிரக்ஞானந்தா மீண்டும் உலகிற்கு காட்டியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் ஆனந்த் போன்ற சதுரங்க ஜாம்பவான்களுடன் பிரக்ஞானந்தா தனது பெயரை நம்பர் ஒன் வீரராக பொறித்துள்ளார். அதன்படி, விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு நடப்பு உலக செஸ் சாம்பியனை தோற்கடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். இந்திய சதுரங்கத்தின் ஒளிரும் நட்சத்திரமாகவும் தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளார்.


பிரக்ஞானந்தா சொன்னது என்ன?


போட்டியின் நான்காவது சுற்றில் நடப்பு உலக சாம்பியனை வீழ்த்தியது தொடர்பாக பேசிய பிரக்ஞானந்தா, “நான் மிக எளிதாக சமன் செய்துவிட்டதாக உணர்ந்தேன், பின்னர் எப்படியோ அவருக்கு விஷயங்கள் தவறாகப் போகத் தொடங்கின. நான் சிப்பாய்களை வீழ்த்திய பிறகும் அது பிடிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்று உணர்ந்தேன். எந்த நாளும்,  ஒரு வலிமையான வீரரை வென்றால், அது எப்போதும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் அவர்களை வெல்வது மிகவும் எளிதானது அல்ல. கிளாசிக்கல் செஸ்ஸில் உலக சாம்பியனுக்கு எதிராக முதல் முறையாக வெற்றி பெறுவது நன்றாக இருக்கிறது” என தெரிவித்தார்.