மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவு போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் இந்தியா சார்பில் பூஜா கேலோத் பங்கேற்று முதல் இரண்டு சுற்றுகளில் வெற்றி பெற்றார். அதன் தொடர்ச்சியாக அரையிறுதி போட்டிக்கு முன்னேறிய அவர், அரையிறுதிப் போட்டியில் இவர் கனடாவின் மேடிசன் பார்க்ஸை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் இந்தியாவின் பூஜா கேலோத் 9-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் அவர் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.
வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பூஜா கேலோத் ஸ்காட்லாந்து நாட்டின் கிறிஸ்டினாவை எதிர்த்து நேற்று விளையாடினார். இந்தப் போட்டியில் தொடக்க முதலே பூஜா கேலோத் ஆதிக்கம் செலுத்தினார். இதன்காரணமாக இவர் 12-2 என்ற கணக்கில் எளிதாக போட்டியை வென்றார். அத்துடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார். இதன்மூலம் மல்யுத்தத்தில் நேற்று இந்தியாவிற்கு 3வது வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
இந்நிலையில், வெண்கலம் பதக்கம் வென்ற பிறகு பூஜா கேலோத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர், "எனது நாட்டு மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இங்கு தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று நான் விரும்பினேன்... ஆனால் என் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அவற்றை சரிசெய்வேன்" என்றார்.
இதையடுத்து மல்யுத்த வீராங்கனை கேலோத்துக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆறுதல் தெரிவித்துள்ளார். அதில், “ பூஜா, உங்க மெடல் கொண்டாடப்படவேண்டியது. நீங்கள் மன்னிப்பு கேட்க தேவையில்லை. உங்களால் நாங்கள் மகிழ்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்