ஐ.பி.எல். தொடரின் 17வது ஆட்டம் இன்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதின. தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் பஞ்சாப் அணியும், வெற்றியை தொடரும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் அணியும் களத்தில் இறங்கின.


டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மும்பை அணியின் இன்னிங்சை டி காக்கும், ரோகித் சர்மாவும் தொடங்கினர். இந்த தொடர் தொடங்கியது முதல் பார்மில் இல்லாமல் தவிக்கும் டி காக்கும் இந்த போட்டியிலும் தடுமாறினர், இதனால், அவர் தீபக் ஹூடாவின் பந்துவீச்சில் ஹென்ரிக்சிடம் கேட்ச் கொடுத்து 3 ரன்களில் வெளியேறினார். அடுத்து பார்மில் இல்லாமல் தடுமாறும் மற்றொரு வீரரான இஷான் கிஷான் களமிறங்கினார்.




கடந்த சில போட்டிகளில் ரன்களை எடுக்காமல் பந்துகளை வீணடித்து வந்த இஷான் கிஷான், இந்த போட்டியிலும் ரன் எடுக்க மிகவும் சிரமப்பட்டார். 17 பந்துகளை சந்தித்த இஷான்கிஷான் வெறும் 6 ரன்களை மட்டுமே எடுத்து ரவி பிஷ்னாய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். ரோகித் சர்மா – சூர்யகுமார் யாதவ் ஜோடி இணைந்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து நேர்த்தியான ஆட்டத்த வெளிப்படுத்தினார். 27 பந்துகளில் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 33 ரன்களை குவித்திருந்த சூர்யகுமார் யாதவ் ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.




அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த கேப்டன் ரோகித் சர்மாவும் ஆட்டமிழந்தார். அவர் 52 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 63 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா ஆட்டமிழந்தபோது அணியின் ஸ்கோர் 17.3 ஓவர்களில் 112 ஆக இருந்தது. அடுத்து வந்த வீரர்களில் பொல்லார்ட் மட்டும் 16 ரன்களை எடுத்தார். பிற வீரர்கள் ஒற்றை ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை மட்டுமே எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் முகமது ஷமி மற்றும் ரவி பிஷ்னோய் 4 ஓவர்கள் வீசி 21 ரன்களை விட்டுக்கொடுத்து தலா 2 விக்கெட்டுகளை வீழ்ததினர். ஹென்ரிக்ஸ் மற்றும் தீபக் ஹூடா மிகவும் கட்டுக்கோப்பாக பந்துவீசினர்.