Bronze Medalist Sharad Kumar: ஒரே போட்டியில், மாரியப்பனுக்கு டஃப் கொடுத்த இந்திய வீரர் யார்?
இன்றைய போட்டியில் தொடர்ந்து மாரியப்பனும், ஷரத்தும் ஒரே நிலையில் இருந்ததால், இருவருக்கும் இடையே கடும்போட்டி நிகழ்ந்தது.

டோக்கியோ பாராலிம்பிக்கில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட உயரம் தாண்டுதல் போட்டி இன்று நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பனுக்கு வெள்ளிப்பதக்கமும் பீகாரைச் சேர்ந்த ஷரத் குமாருக்கு வெண்லகப் பதக்கமும் கிடைத்துள்ளது. ஒரே போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று இந்திய வீரர்கள் அசத்தியுள்ளனர். இதனால், டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 10-ஐ எட்டியுள்ளது. இந்நிலையில், இன்றைய போட்டியில் மாரியப்பனுக்கு டஃப் கொடுத்த ஷரத் யார்?
அவருடைய சாதனை பயணத்தைப் பார்ப்போம்!
Just In




இன்றைய போட்டி தொடங்கியவுடன், மாரியப்பன் தங்கவேலு மற்றும் ஷரத் குமார் ஆகிய இருவரும் 1.73 மீ, 1.77 மீ, 1.80 மீ, 1.83 மீ தூரங்களை முதல் வாய்ப்பிலையே தாண்டி க்ளியர் செய்தினர். பதக்கத்திற்காக இரு இந்திய வீரர்கள் இடையே கடும்போட்டி நிகழ்ந்தது. போட்டியின் நடுவே மழை வேற குறிக்கிட்டதால் போட்டியில் முழுமையாக சிறப்பாக செயல்பட முடியாத நிலைமை இருந்திருக்கலாம். எனினும் இரு வீரர்களும் தங்களால் முடிந்த வரை போராடினர். தொடர்ந்து இரு வீரர்களும் ஒரே நிலையில் இருந்ததால், இருவருக்கும் இடையே கடும்போட்டி நிகழ்ந்தது. ஆனால், 1.86 மீட்டர் தாண்டும் மூன்று வாய்ப்புகளையும் ஷரத் மிஸ் செய்ததால், மாரியப்பன் போட்டியின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறினார்.
பாராலிம்பிக் போட்டிகளை பொருத்தவரை, உலகெங்கிலும் இருந்து வெவ்வேறு பாதிப்புகளுடன் வீரர், வீராங்கனைகள் போட்டியிடுவர். அவர்களது, உடல் பாதிப்புகள் ஒருவரை ஒருவரிடம் இருந்து வித்தியாசப்பட்டிருக்கும். இதனால், ஒரு விளையாட்டில் வெறும் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளின் கீழ் பிரிக்காமல், வெவ்வேறு பாதிப்புகளைப் பொருத்து பிரிவுகள் பிரிக்கப்படும். அந்த பிரிவுகளின்கீழ் வீரர் வீராங்கனைகள் போட்டியிடுவர். ஒரே விளையாட்டின் கீழ் பிரிக்கப்படும் பிரிவுகளை சில குறியீடுகளை கொண்டு அடையாளப்படுத்துவர். அந்த வரிசையில், ஷரத் குமார் டி-42 பிரிவில் பங்கேற்று விளையாடுபவர். தற்போது உலக தரவரிசையில் இரண்டாம் இடத்திலும் உள்ளார் அவர்.
பீகார் மாநிலம் மோடிப்பூரைச் சேர்ந்த ஷரத், இரண்டு வயது இருக்கும்போதே போலியாவால் பாதிக்கப்பட்டார். ஆனால், எதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற வேட்கை ஷரத்தை துரத்தியது. விளைவு, பள்ளியில் உயரம் தாண்டுதல் போட்டியில் சிறப்பாக விளையாடி ரெக்கார்டு படைத்த தனது சகோதரனைப் பார்த்து இவரும் விளையாட ஆரம்பித்திருக்கிறார். விளையாட்டு சீரியஸாகவே, உயரம் தாண்டுதலில் சாதிக்க நினைத்துள்ளார் அவர்.
தொடக்கத்தில், ஜூனியர் போட்டிகளில் பதக்கம் வெல்ல ஆரம்பித்தார். 2009-ம் ஆண்டு நடைபெற்ற தேசிய ஜூனியர் உயரம் தாண்டுதலில் பதக்கம் வென்ற அவர், அடுத்தடுத்து தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தொடங்கினார். கடந்த 2012-ம் ஆண்டு முதல் உயரம் தாண்டுதலில் சாதித்து வரும் ஷரத்துக்கு, ஒலிம்பிக் கனவும் கைகூடியுள்ளது. முதல் பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்று தடம் பதித்துள்ளார் இந்த சாதனை வீரர். அடுத்தடுத்து பதக்கங்களை குவிக்க வாழ்த்துகள் ஷரத்!