2023ஆம் ஆண்டுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டி கடந்த 3ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, சௌத் கொரியா, சீனா, ஜப்பான் என மொத்தம் 6 அணிகள் களமிறங்கியுள்ளது. 2011ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் கடந்த ஆண்டு வரை மொத்தம் 6 சீசன்கள் நடைபெற்றுள்ளது.


ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி:


இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தனித்தனியே இரண்டு முறை கோப்பையையும், ஒருமுறை இணைந்தும் கோப்பையை வென்றுள்ளது. இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கணக்கில் தலா மூன்று கோப்பைகள் உள்ளது. இது இல்லாமல், கடந்த முறை அதாவது, 2021ஆம் ஆண்டு சௌத் கொரியா அணி கோப்பையை வென்றது. இந்நிலையில், ஆசிய சாம்பியன்ஸ் டிராபி கோப்பை இந்தியாவில் முதல் முறையாக நடைபெறுகிறது. தொடரை தமிழ்நாடு மாநில அரசு நடத்துகிறது.


கடந்த 6 சீசன்களிலும் தொடரை நடத்திய நாடு கோப்பையை வென்றதாக வரலாறு இல்லை. அதனை இம்முறை பலமான இந்திய அணி முறியடிக்குமா என்பதை காத்திருந்திதான் பார்க்கவேண்டும். கடந்த 3ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டித் தொடர் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 


சீனா - பாகிஸ்தான்:


இந்நிலையில் சீனா அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்கியது. பாகிஸ்தான் அணியும் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யவில்லை என்றாலும், புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் இருந்தது. கடைசி இரண்டு இடங்களில் உள்ள அணிகள் தங்களின் முதல் வெற்றிக்காக மோதிக்கொண்டன. 


போட்டியின் முதல் சுற்றில் இரு அணிகளும் கோல் எதுவும் எடுக்காமல் இருந்தது. இரண்டாவது சுற்றில் பாகிஸ்தான் அணியின் முகமது கான் முதல் கோலை பதிவு செய்தார். இதனால் போட்டியில் பாகிஸ்தான் அணி முன்னிலை வகித்தது. இரண்டாவது சுற்று முடிவில் பாகிஸ்தான் அணி முன்னிலை வகித்தது. 


விறுவிறுப்பு:


அதன் பின்னர் மூன்றாவது சுற்று  போட்டியை மிகவும் விறுவிறுப்பாக மாற்றியது. பாகிஸ்தான் அணி வீரர்கள் செய்த சொதப்பலால் அவுட் ஃபீல்டில் 8 பேர் மட்டுமே விளையாட முடிந்தது. இதனை மிகச் சிறப்பாக பயன்படுத்திய சீனா தனது முதல் கோலை பதிவு செய்தது. இதனால் போட்டியில் அனல் பறக்க ஆரம்பித்தது. 


அதன் பின்னர் தனது முதல் வெற்றியை பதிவு செய்ய பாகிஸ்தான் அணியின் கூட்டு முயற்சிக்கு பலன் கிடைத்தது. இதனால் மூன்றாவது சுற்றிலேயே பாகிஸ்தான் அணி தனது 2வது கோலை சிறப்பாக பதிவு செய்து முன்னிலை வகித்தது. 


போட்டியின் வெற்றியாளர் யார் என்பதை முடிவு செய்யும் 4வது சுற்றில் இரு அணி வீரர்களும் போர் வீரர்களைப் போல் செயல்பட்டனர். இதனால் ரசிகர்களுக்கு திக் திக் நிமிடங்களாகத்தான் இருந்தது. இறுதியில் சீனா அணி மேற்கொண்டு கோல் எதுவும் அடிக்காததால், பாகிஸ்தான் அணி சீனாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி, இந்த தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த தோல்வியின் மூலம் சீனா அணியின் ப்ளேஆஃப் வாய்ப்பு மங்கியுள்ளது.