பாகிஸ்தானில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி விளையாடுவதாகத் திட்டமிடப்பட்ட போட்டிகள் எதிர்பாராத விதமாக ரத்து செய்யப்பட்டது. மூன்று ஒருநாள் போட்டிகளும், 5 டி20 போட்டிகளுகள் விளையாடுவதற்காக பாகிஸ்தான் வந்து இறங்கிய நியூசிலாந்து அணி பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி, போட்டி எதுவும் விளையாடாமல், அவற்றை ரத்து செய்து மீண்டும் நாடு திரும்பியது. 2004ஆம் ஆண்டுக்குப் பிறகு, பாகிஸ்தான் நாட்டில் நியூசிலாந்து அணி போட்டி எதுவும் இதுவரை விளையாடவில்லை.
இந்தப் போட்டிகளின் முக்கியத்துவம் கருதி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பல்வேறு முன்னேற்பாடுகளைச் செய்திருந்தது. எனினும், போட்டிகள் ரத்து செய்யப்பட்டதால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்களில் வருத்தம் பரவியுள்ளது. மேலும், இதனால் மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூசிலாந்து அணியின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு வீரர்களுக்கான உணவு பில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது இடியாக விழுந்துள்ளது.
நியூசிலாந்து அணியின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு வீரர்கள், மிகப்பெரிய பாதுகாப்பு ஏஜென்சிகளிடம் அதிக கட்டணம் கொடுத்து வரவழைக்கப்பட்டவர். அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவுக்கான பில் தொகை மட்டும், இந்திய ரூபாய் மதிப்பில் 27 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. மேலும், நியூசிலாந்து அணியின் பாதுகாப்புக்காக 5 காவல் கண்காணிப்பாளர்களும், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை பிரியாணி வழங்கப்பட்டுள்ளது. இதன் மொத்த விலை, இந்திய மதிப்பில் சுமார் 27 லட்சம் ரூபாய். ராவல்பிண்டியில் முதல் ஒருநாள் போட்டி நடைபெறுவதற்குச் சில மணி நேரங்கள் முன்பு, அனைத்து போட்டிகளும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டன.
`எங்கள் திட்டப்படி, ராவல்பிண்டியில் பாகிஸ்தானுடன் விளையாடுவதாகத் திட்டமிடப்பட்ட மூன்று ஒருநாள் போட்டிகளில், முதல் போட்டியை இன்று நடத்துவதாகவும், அடுத்தபடியாக லாகூர் சென்று ஐந்து டி20 போட்டிகளை விளையாடுவதாகவும் அறிவித்திருந்தோம். எனினும், நியூசிலாந்து அரசு பாகிஸ்தான் நாட்டில் சுட்டிக்காட்டியுள்ள பாதுகாப்பு விவகாரங்களையும், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு ஆலோசகர்களின் அறிவுரையையும் பின்பற்றி, இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி விளையாடுவதில் இருந்து விலகுகிறது’ என்று பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்த போது வெளியிட்ட அறிக்கையில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி குறிப்பிட்டிருந்தது.
அதே வேளையில், பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய இரு கிரிக்கெட் அணிகளும் டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்காக கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்ட வருகின்றன. இந்தப் போட்டிகளில் 2009ஆம் ஆண்டு உலகக் கோப்பையும் பாகிஸ்தான் அணி வென்றுள்ளது; நியூசிலாந்து அணி இதுவரை டி20 உலகக் கோப்பையைக் கைப்பற்றவில்லை. எனவே இரு அணிகளும் தங்கள் முழு ஈடுபாட்டையும் உலகக் கோப்பைக்கான போட்டிகளுக்காக அளித்துக் கொண்டிருக்கின்றன.