உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராகவும், மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் ஜாம்பவனாக திகழ்ந்து வருபவர் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி. உலகின் மூன்று வடிவிலான ஆட்டங்களில் சிறப்பாக விளையாடுபவர்களாக விராட் கோலியுடன், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சன் ஆகியோர் ஒப்பிடப்பட்டு வருகின்றனர். இவர்களில் யார் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் கேப்டன் என்ற விவாதங்களும் நடைபெற்றது உண்டு. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக விராட் கோலியுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசாமை கிரிக்கெட் வல்லுநர்கள் ஒப்பிட்டு வருகின்றனர். அவரது ஆட்டத்திறனும், ரன் சேகரிக்கும் விதமும் விராட் கோலியைப் போல உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், சமூக வலைதளங்களிலும் விராட் கோலியுடன், பாபர் அசாமை ஒப்பிட்டு பல்வேறு வீடியோக்களும் உலா வருகின்றன.




32 வயதான விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணிக்காக கடந்த 2008ம் ஆண்டு அறிமுகமானார். இதுவரை 91 டெஸ்ட் போட்டிகளில் 27 சதங்களுடன், 7 இரட்டை சதங்கள், 25 அரைசதங்களுடன் 7 ஆயிரத்து 490 ரன்களை கோலி குவித்துள்ளார். இதுமட்டுமின்றி, 254 ஒரு நாள் போட்டிகளில் 43 சதங்கள், 62 அரைசதங்களுடன் 12 ஆயிரத்து 169 ரன்களும், 89 டி20 போட்டிகளில் 3 ஆயிரத்து 159 ரன்களும் குவித்துள்ளார். மேலும், 191 ஐ.பி.எல். போட்டிகளில் 6 ஆயிரத்து 76 ரன்களை குவித்துள்ளா். இவற்றில் 5 சதங்களும் அடங்கும். விராட் கோலியின் ரன் சேகரிப்பு காரணமாக அவரை ரன் மெஷின் என்றும், கிங் கோலி என்றும் ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.


26 வயதான பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 2015-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அவர் 33 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 5 சதங்களுடன் 2 ஆயிரத்து 169 ரன்களை குவித்துள்ளார். 80 ஒருநாள் போட்டிகளில் ஆடி 13 சதங்களுடன் 3 ஆயிரத்து 808 ரன்களை குவித்துள்ளார். 54 டி20 போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 35 ரன்களை குவித்துள்ளார். இவரது சிறந்த பேட்டிங்கால் இவரை கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்கள் விராட் கோலியுடன் ஒப்பிட்டு வருகின்றனர். மேலும், சிலர் இவரை பாகிஸ்தானின் கோலி என்றும் செல்லமாக அழைக்கின்றனர்.




இந்த நிலையில், பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்துள் பாபர் அசாம், “விராட் கோலி உலகின் தலைசிறந்த வீரர். அவர் பெரிய ஆட்டங்கள் எங்கு நடந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். அவருடன் என்னை ஒப்பிடும்போது, அழுத்தமாக நான் உணரவில்லை. என்னை மிகப்பெரிய வீரருடன் ஒப்பிடுவதை கண்டு நான் பெருமையாகவே உணர்கிறேன். அவருடன் மக்கள் என்னை ஒப்பிடுகிறார்கள். அது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய இலக்கு பாகிஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடி பெருமை அடையவைப்பதே. நாங்கள் இருவரும் வித்தியாசமான ஆட்டக்காரர்கள். நான் எனது பாணியில் விளையாடுகிறேன். அவர் அவரது பாணியில் விளையாடுகிறார். இந்திய அணிக்காக கோலி தொடர் வெற்றிகளை பெற்றுத்தருவது போல, பாகிஸ்தான் அணிக்காக தொடர் வெற்றிகளை பெற்றுத்தர வேண்டும் என்பதே எனது இலக்கு” எனக் கூறினார்.


இருப்பினும், கிரிக்கெட் வல்லுநர்கள் சிலர் சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோலியை ஒப்பிட்டு வரும் சூழலில், பாபர் அசாமை விராட் கோலியுடன் ஒப்பிடுவது தவறு என்றும் கூறுகின்றனர்.


மேலும் படிக்க : CSK Team: தோனிக்கு எழுந்துள்ள புதிய தலைவலி - சென்னை அணிக்கு பின்னடைவா?