இந்திய மல்யுத்த வினேஷ் போகாட் டோக்கியோ செல்லும் விமானத்தைத் தவறவிட்டதும் அதனைத் தொடர்ந்த நிகழ்வுகளும் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்திலும் தொடர்ந்து சீனா, ஜப்பான், ரஷியா ஆகிய நாடுகளும் உள்ளன. இந்தியா இதுவரை ஒரே ஒரு வெள்ளிப் பதக்கம் மட்டுமே பெற்றுள்ளது. இந்நிலையில், பதக்கம் வென்று தருவார் என்ற நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் வினேஷ் போகாட் விமானத்தைத் தவறவிட்ட கதை வெளியாகியுள்ளது.
மல்யுத்த பயிற்சிக்காக கடந்த சில மாதங்களாகவே வினேஷ் போகாட் ஜெர்மனியில் பிராங்ஃபர்ட் நகரில் தங்கியிருந்தார். அங்கு அவருக்கு வோலர் அகோஸ் என்ற பயிற்றுநர் பயிற்சி அளித்துவந்தார்.இந்நிலையில், அவர் டோக்கியோவுக்கு புறப்பட்ட ஆயத்தமானார்.பிராங்ஃபர்ட் விமான நிலையத்துக்கு வந்த அவரை ஐரோப்பிய யூனியன் விதிமுறைகளை மீறி வழங்கப்பட்ட விசா காலம் முடிவடைந்து ஒரு நாள் கூடுதலாக ஜெர்மனியில் தங்கிவிட்டதாக விமான நிலைய அதிகாரிகள் கூறினர். இதனால், அவரால் டோக்கியோ விமானத்தைப் பிடிக்க முடியவில்லை. இந்தத் தகவல் இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தையும், ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா என்றழைக்கப்படும் இந்திய விளையாட்டு ஆணையத்தையும் சென்றடைந்தது.
உடனடியாக இந்திய ஒலிம்பிக் சம்மேளனம், ஜெர்மனியில் உள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டது. அதிகாரிகள் சென்று, வினேஷ் போகத் என்ன மாதிரியான விசாவில் தங்கியிருந்தார் என்பதை விவரித்தது. அவர் ஹங்கரியிலிருந்து ஜெர்மனியின் ஃபிராங்ஃபர்ட் நகரில் வந்திறங்கிய நாளும் சேர்த்து கணக்கிடப்பட்டதால் நேர்ந்த குழப்பம் இது என்பதை அதிகாரிகள் விளக்கினர். இதனால், சர்ச்சை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து வினேஷ் போகத் டோக்கியோ செல்ல அனுமதியளிக்கப்பட்டது. வினேஷ் போகாட், மகளிருக்கான ஃப்ரீஸ்டைல் பிரிவு மல்யுத்தத்தில் 53 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடுகிறார். இவர் ஆசிய விளையாட்டுகள் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கல் சகோதரிகளை நினைவிருக்கிறதா?
மல்யுத்த விளையாட்டை ஒட்டுமொத்த இந்தியாவும் அறியச் செய்த திரைப்படம் டங்கல். மல்யுத்த வீரர் மகாவீர் சிங் போகத் ‘போகாட் சகோதரிகள்’ என அழைக்கப்படும் தனது மகள்கள் கீதா போகாட், பபிதாகுமரி, ரிது போகாட் ஆகிய மூவ உருவாக்க தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். இந்தியில் வெளியாகிப் பெரும் வெற்றிபெற்ற 'தங்கல்' திரைப்படம், இந்தக் உண்மைச் சம்பவங்களைத் தழுவி எடுக்கப்பட்டது.
மகாவீர் அவருடைய மகள்களை மட்டுமல்லாது தனது சகோதரர் ராஜ்பாலின் மகள்களான வினேஷ் போகாட், பிரியங்கா போகாட் ஆகியோரையும் வீராங்கனைகளாக மாற்றினார். தன் தம்பியின் மரணத்துக்குப் பிறகு அவர்களைத் தன்னுடனேயே தங்கவைத்துக் கொண்டார்.
இவர்களில் வினேஷ் போகத். காமன்வெல்த் போட்டியிலும் ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்தவராவார்.