மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் இதுகுறித்து பேசிய அவர், "இன்று அவரது எடை 50 கிலோ 100 கிராம் என கண்டறியப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
"அனைத்து வசதிகளையும் அரசு செய்துகொடுத்தது"
இந்த விவகாரத்தில் ஐக்கிய உலக மல்யுத்த கூட்டமைப்பிடம் (UWW) இந்திய ஒலிம்பிக் சங்கம் கடும் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி. உஷா பாரிஸில் இருக்கிறார். பிரதமர் அவரிடம் பேசி, தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். தனிப்பட்ட பணியாளர்கள் உட்பட அவருக்கு அனைத்து வசதிகளையும் அரசு வழங்கியது" என்றார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தின் 50 கிலோ எடை பிரிவில் இறுதி போட்டி வரை சென்று அசத்தியவர் வினேஷ் போகத். உலகின் முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி இறுதி போட்டி வரை சென்றபோதிலும், போட்டிக்குரிய எடையை விட 100 கிராம் அதிகளவு இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய இறுதி போட்டியில் வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, வினேஷ் போகத்துக்கு ஆறுதல் கூறிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, "அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்கும் நபர் அல்ல வினேஷ் போகத்; மீண்டும் அதே வலிமையுடன் மல்யுத்த களத்தில் வினேஷ் போகத் இறங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது;
வினேஷ் போகத், இந்தியாவுக்கு பெருமை சேர்த்துக் கொடுத்தவர்; உங்களின் பலம் போன்று ஒட்டுமொத்த இந்தியாவும் உங்களுக்கு துணையாக நிற்கிறது” என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.