டென்னிஸ் உலகின் தலைசிறந்த வீரர்களின் ஒருவரான செர்பியாவின் 36 வயதான நோவக் ஜோகோவிச், தொடர்ந்து 5வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். கடந்த 2018ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஆண்கள் ஒற்றையர் கோப்பையை வென்ற ஜோகோவிஸ், 2023 விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் 20 வயதான கார்லோஸ் அல்கராஸிடம் தோல்வியை சந்தித்தார்.
வெற்றிகரமான வீரராக பார்க்கப்படும் நோவக் ஜோகோவிச் கடந்த 2003 ம் ஆண்டு தொழில்முறை டென்னிஸில் நுழைந்தார். இவர் இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த ஜோகோவிச்..?
நோவக் ஜோகோவிச் கடந்த 1987 ம் ஆண்டு மே 22 ம் தேதி செர்பியாவின் பெல்கிரேடில் பிறந்தார். 4 வயதிலிருந்தே டென்னிஸ் விளையாடத் தொடங்கிய ஜோகோவிச், தனது 18 வயதில் ஏடிபியின் முதல் 100 தரவரிசையில் இணைந்தார். இதற்குப் பிறகு, ஜூலை 2006 இல், ஜோகோவிச் தனது முதல் ATP பட்டத்தை வென்றார். 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் ஜோகோவிச் வெண்கலப் பதக்கம் வென்றார்.
23 கிராண்ட்ஸ்லாம் பட்டம்:
இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றதன் மூலமாகவே ஜோகோவிச் எத்தகைய வீரர் என்பதை தெரிந்து கொள்ளலாம். இதில், 10 முறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், 7 முறை விம்பிள்டனையும், 3-3 முறை பிரெஞ்ச் மற்றும் யுஎஸ் ஓபனையும் வென்றுள்ளார்.
நோவக் ஜோகோவிச்சிடம் சொத்து மதிப்பு..?
நோவக் ஜோகோவிச்சின் தற்போதைய நிகர மதிப்பானது சுமார் 240 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கூறப்படுகிறது. 2023 ஆம் ஆண்டில், நோவக் ஜோகோவிச் இதுவரை 4 மில்லியன் யூரோக்களுக்கு மேல் பரிசுத் தொகையை வென்றுள்ளார். 2003 முதல் நோவக் ஜோகோவிச் மற்ற டென்னிஸ் வீரரை விட அதிக பரிசுத் தொகையை வென்றுள்ளார்.
தற்போதைய உலகின் நம்பர் 2 டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் கடந்த 2014ம் ஆண்டு மொனாக்கோவில் உள்ள மான்டே கார்லோ அருகே சொகுசு வீட்டை வாங்கினார். இந்த நேரத்தில் அவரது வீட்டின் விலை சுமார் 5.1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கூறப்படுகிறது. இது தவிர பல நாடுகளிலும் ஜோகோவிஸ்ஸிற்கு வீடுகள் உள்ளன. மேலும், இவரிடம் ஆஸ்டன் மார்ட்டின், பியூஜியோட், மெர்சிடிஸ் பென்ஸ், பென்ட்லி மற்றும் BMW நிறுவன கார்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.