பிரேசில் கால்பந்து நெய்மர் இரண்டு கோல்கள் அடித்ததன்மூலம், தென் அமெரிக்காவில் 2026 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் 5-1 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை பிரேசில் தோற்கடித்தது. இதன் மூலம் பீலேவை பின்னுக்கு தள்ளி பிரேசில் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையை நெய்மர் பெற்றார்.


பிரேசில் - பொலிவியா:


பொலிவியாவுக்கு எதிரான ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் பிரேசில் அணிக்காக நெய்மர் தனது 78வது கோலை அடித்தார். 5-1 என்ற கணக்கில் பிரேசிலின் நான்காவது கோலாக இது பதிவானது. நெய்மருக்கு காயம் ஏற்பட்ட போதிலும் பிரேசிலின் கடைசி கோலையும் அடித்தார். இதன்மூலம், பிரேசில் அணிக்காக நெய்மர் அடித்த மொத்த கோல்களின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்தது. 


இந்த வெற்றி பிரேசிலின் புதிய பயிற்சியாளர் பெர்னாண்டோ டினிஸுக்கு ஒரு சிறந்த தொடக்கமாக அமைந்துள்ளது. கடந்த உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் பிரேசில் தோல்வியடைந்ததையடுத்து அந்த அணியின் பயிற்சியாளராக டைட்டிற்குப் பதிலாக நியமிக்கப்பட்டார்.


பீலே சாதனையை முறியடித்த நெய்மர்: 


பிரேசிலின் முன்னாள் கேப்டன் நெய்மர் 77 கோல்களுடன் பிரேசிலுக்காக அதிக கோல்களை அடித்ததில் பீலே ரெக்கார்ட்டை ஏற்கனவே சமன் செய்திருந்தார். இந்த போட்டி தொடங்கி 17வது நிமிடத்தில் பீலேவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு நெய்மருக்கு கிடைத்தது, அவரது அணி அவருக்கு ஒரு ஸ்பாட் கிக் வழங்கியது, இருப்பினும் நெய்மரின் பெனால்டி ஷாட்டை பொலிவியன் கோல்கீப்பர் கில்லர்மோ விஸ்காரா தடுத்தார். 


ஆனால் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, நெய்மருக்கு அந்த பொன்னான வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்தி கொண்ட நெய்மர், பந்தை பொலிவியாவிற்கு எதிராக கோலை பதிவு செய்தார். பிரேசிலுக்காக தனது 125 வது போட்டியில் 78 கோல்களை எடுத்தது பீலேவின் சாதனையை முறியடுத்தார். 






பீலேவின் சாதனையை முறியடித்ததற்காக பிரேசிலிய கால்பந்து கூட்டமைப்பு தலைவர் எட்மண்டோ ரோட்ரிக்ஸ், நெய்மருக்கு நினைவு தகடு ஒன்றை வழங்கினார். அதன்பிறகு பேசிய நெய்மர், “நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்த சாதனையை நான் எட்டுவேன் என்று நினைக்கவே இல்லை என்றார்.


31 வயதான பிரேசில் நட்சத்திரம் நெய்மர் கடந்த மாதம் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப்பில் இருந்து வெளியேறி சவுதி அரேபிய கால்பந்து கிளப்பான அல்-ஹிலாலில் இணைந்தார்.


பீலே மறைவு:


சிறந்த கால்பந்து வீரராகக் கருதப்படும் பீலே, 1957 முதல் 1971 வரை பிரேசிலுக்காக 92 போட்டிகளில் விளையாடி 77 கோல்களை அடித்துள்ளார். பீலே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது 82வது வயதில் காலமானார்.


பிரேசிலிய கால்பந்து கூட்டமைப்பு 114 போட்டிகளில் 95 கோல்களை அடித்த பீலேவை அதிக கோல் அடித்தவராக பதிவு செய்திருந்தது. ஆனால், கிளப்புகளுக்கு எதிரான பிரேசில் அணியின் நட்பு ஆட்டங்களில் பீலே அடித்த கோல்களை பிஃபா கணக்கிடவில்லை.