இந்திய ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்தின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29ம் தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், விளையாட்டில் சிறந்து விளங்கும் தேசத்தின் விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, இந்தியாவிற்காக விளையாட்டு போட்டிகளின் சிறந்து விளங்கி பல்வேறு சாதனைகள் புரியும் பல்வேறு விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மொத்தம் 7 வெவ்வேறு விருதுகள் வழங்கப்படுகின்றன. அவை என்னென்ன என்பதை பற்றிய முழு விவரங்களை கீழே காணலாம்..
1. மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது:
மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது (முன்னர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது) இந்தியாவின் மிக உயர்ந்த விளையாட்டு விருதாகக் கருதப்படுகிறது. இந்த விருதை முதலில் வென்றவர் இந்தியாவின் செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வானந்தன் ஆனந்த். கடந்த நான்கு ஆண்டுகளாக விளையாட்டில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கு இந்த ’மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது’ வழங்கப்படுகிறது. இதில், விருது வாங்கும் வீரருக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
2. அர்ஜுனா விருது:
அர்ஜுனா விருதானது கடந்த 1961 ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1991-92 இல் கேல் ரத்னா அறிவிக்கப்படுவதற்கு முன்பு நாட்டின் மிக உயர்ந்த விளையாட்டு விருதாக அர்ஜூனா விருதே பார்க்கப்பட்டது. அர்ஜுனா விருது வென்ற வீரர்களுக்கு அர்ஜுனன் சிலை, சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இந்த அர்ஜூனா விருதை முதல் முதலில் வாங்கியவர் ஹாக்கி வீராங்கனையான அன்னா லம்ஸ்டன் ஆவார். கடந்த 1961 ஆம் ஆண்டில் 20 விளையாட்டு வீரர்கள் அர்ஜுனா விருதை வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
3. துரோணாச்சார்யா விருது:
இந்தியாவில் கடந்த 1985 ம் ஆண்டு முதல் துரோணாச்சார்யா விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதானது தலைசிறந்த வீரர்களை உருவாக்கி இந்திய நாட்டிற்கு அர்பணித்த பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதை வெல்லும் பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சாரியாரின் வெண்கலச் சிலை, சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்படும். தடகளப் பயிற்சியாளர் ஓ.எம்.நம்பியார் இந்த விருதைப் பெற்ற முதல் பயிற்சியாளர். இவர்தான் நமக்கு பி.டி.உஷாவை தந்தவர்.
4. மேஜர் தயான் சந்த் விருது
இது மேஜர் தயான் சந்தின் பெயரால் வழங்கப்படும் மற்றொரு உயரிய விருதாகும். இது விளையாட்டில் வாழ்நாள் சாதனை விருதாக வழங்கப்படுகிறது. இந்த விருதை வெல்பவர்களுக்கு தயான் சந்த் சிலை, சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்படும். குத்துச்சண்டை வீரர் ஷாஹுராஜ் பிராஜ்தார், இந்திய ஹாக்கி வீரர் அசோக் திவான் மற்றும் இந்திய பெண்கள் கூடைப்பந்து வீராங்கனை அபர்ணா கோஷ் ஆகியோர் இந்த விருதை முதன் முதலில் பெற்றனர்.
5. மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பை
மௌலானா அபுல் கலாம் ஆசாத் டிராபி அல்லது MAKA டிராபி என்பது இந்தியாவின் பழமையான தேசிய விளையாட்டு விருது ஆகும். இந்த விருதானது கடந்த 1956-57 முதல் வழங்கப்படுகிறது. கடந்த 12 மாதங்களில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் சிறந்த விளங்கும் பல்கலைக்கழகங்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
6. ராஷ்ட்ரிய கேல் ப்ரோட்சஹான் புருஸ்கார்
இந்த விருது 2009 ஆம் ஆண்டில் தேசிய விளையாட்டு விருதுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்த விருது நாட்டில் விளையாட்டு மேம்பாடு மற்றும் மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு வழங்கப்படுகிறது.
7. டென்சிங் நார்கே தேசிய சாகச விருது
நேபாளி வம்சாவளியைச் சேர்ந்த இந்தியரான டென்சிங் நோர்கே, உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் இருவரில் ஒருவர். சாகச நடவடிக்கைகளில் சிறந்து விளங்கியவர்களை அங்கீகரித்து 1994 ஆம் ஆண்டு அவரது நினைவாக இந்த விருது நிறுவப்பட்டது.