மதுரையில் ஹாக்கி போட்டி சிறப்பாக நடைபெறவுள்ளது. இதற்காக பிரத்தியே ஹாக்கி மைதானம் உருவாக்கப்பட்டு வருகிறது.

மதுரை ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலக கோப்பை போட்டி
 
மதுரை மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் வரும் 28-11-2025 முதல் 10-12-2025 வரை 14வது ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகப்கோப்பை நடைபெற உள்ளது. இந்த ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலக கோப்பை போட்டியில், மொத்தம் 24 அணிகள் 6 பிரிவுகளில் மோதவுள்ளன. நவம்பர் மாதம் 28 ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி வரை மொத்தம் 72 போட்டிகள், மதுரை மற்றும் சென்னை என இரண்டு நகரங்களில் நடைபெறவுள்ளன. இந்த தொடரில் உலகம் முழுவதிலும் இருந்து 24 அணிகள் பங்கேற்க உள்ளன. 
 
போட்டிகள் நடைபெறும் இடத்தில் ஆய்வு
 
போட்டிகள் நடைபெறும் மைதானத்தின் தரம், இருக்கை அமைப்புகள், ஒளி மற்றும் ஒலி அமைப்புகள், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள், அவசர கால மருத்துவ சேவை மையம், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கேமராக்கள், வீரர்கள் ஓய்வு அறைகள், வீரர்கள் உடற்பயிற்சி செய்யும் பகுதிகள், போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்தம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் சர்வதேச தர நிலைக்கேற்ப குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு செய்து முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கும் ஒப்பந்த நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, சமீபத்தில் அறிவுரை வழங்கினார். ஏற்கனவே இது குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல் தெரிவித்திருந்தார், என்பது குறிப்பிடதக்கது. இந்த சூழலில் ஹாக்கி போட்டிக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 
ஒலிம்பிக் போட்டி அளவிற்கான மைதானம்
 
மேலும் இந்த ஹாக்கி மைதானம் குறித்து மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா நம்மிடம் கூறுகையில்..,” மதுரையில் ஹாக்கி போட்டி சிறப்பாக நடைபெறவுள்ளது. இதற்காக பிரத்தியே ஹாக்கி மைதானம் உருவாக்கப்பட்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டியில் பயன்படுத்தி ஊதா நிற டர்ஃப் பயன்படுதப்படுகிறது. ஏற்கனவே இருந்த பச்சை நிற டர்ஃபை காட்டிலும், இந்த ஊதா நிற டர்ஃப், ஹாக்கி பந்தை தனியாக காட்டும். இதனால் வீரர்கள் விளையாட எளிமையாக இருக்கும். வீரர்களுக்கு கால்வலிகளில் பெரிதாக இருக்காது. இப்படி பல்வேறு அம்சங்களுடன் இந்த ஹாக்கி டர்ஃப் இருக்கும்” என தெரிவித்தார். மதுரையில் ஹாக்கி போட்டி நடைபெறவுள்ளதை, பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.