தடகள உலகில் இந்தியாவை பெருமை பட வைத்தவர் மில்கா சிங். ‘பறக்கும் சீக்கியர்’(Flying Sikh) என்ற அழைக்கப்பட்ட மில்கா சிங் நேற்று இரவு கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவர் தடகள உலகில் செய்த சாதனை இன்று வரைக்கும் வேற எந்த ஒரு இந்தியரும் செய்ததில்லை. அப்படி பட்ட சிறப்பான மில்கா சிங் எப்படி தடகள போட்டிக்குள் வந்தார். எந்தந்த சாதனைகளை படைத்தார்?
இந்திய ராணுவ பணி:
1929ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள கோவிந்த்புரா என்ற பகுதியில் மில்கா சிங் பிறந்தார். இந்திய சுதந்திரத்தின் போது ஏற்பட்ட பிரிவினையில் அவர் டெல்லிக்கு குடிபெயர்ந்தார். அதன்பின்னர் இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசை இவருக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது. இதற்காக மூன்று முறை முயற்சி செய்துள்ளார். எனினும் இவருடைய உடல் அமைப்பு சரியாக இல்லை என்று கூறி மூன்று முறையும் நிராகரிக்கப்பட்டுள்ளார். இதை கண்டு மனம் தளராமல் தனது உடல் தகுதியை சிறப்பாக முன்னேற்றி நான்காவது முறையாக ராணுவத்தில் சேர முயற்சி செய்தார். நான்காவது முறையில் இவர் ராணுவத்தில் பணி செய்ய தேர்ச்சிப் பெற்றார்.
தடகள வீரர்:
ராணுவத்தில் சேர்ந்த மில்கா சிங்கிற்கு செகந்திராபாத் பகுதியில் இருந்த மின்சார பிரிவில் பணி வழங்கப்பட்டது. அங்கு தினமும் பயிற்சியில் நீண்ட தூரம் ராணுவ வீரர்கள் ஓட வைக்கப்பட்டனர். அப்போது மில்கா சிங்கின் ஓட்டத்தை பார்த்த ராணுவ அதிகாரிகள் வியந்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவரை தடகள பயிற்சியில் களமிறக்கியுள்ளனர். 1956ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் முதல் முறையாக இந்தியா சார்பில் 400 மீட்டர் தடகள ஓட்டத்தில் மில்கா சிங் பங்கேற்றார்.
தடகள சாதனைகள்:
200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தேசிய சாதனைப் படைத்த மில்கா சிங் ஆசிய அளவிலும் பெரிய சாதனையை படைத்தார். 1958ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார். இந்தப் போட்டிக்கு ஒரு மாதத்திற்கு பிறகு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 400 மீட்டர் பிரிவில் தங்கம் வென்று சாதனைப் படைத்தார். அதில் 400 மீட்டர் தூரத்தை 46.6 விநாடிகளில் கடந்து தேசிய சாதனை படைத்தார்.
1960 ரோம் ஒலிம்பிக்:
ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் பெற்ற மில்கா சிங் 1960ஆம் ஆண்டு ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். அதில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றார். இறுதியில் போட்டியில் சிறப்பான ஓட்டத்தை வெளிப்படுத்திய மில்கா சிங் நூல் இழையில் வெண்கலப்பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். அன்று முதல் இன்று வரை ஒலிம்பிக் தடகள போட்டிகளில் வேறு எந்த இந்திய வீரரும் அந்த அளவு சிறப்பாக ஓட வில்லை. 4ஆவது இடத்தை அவர் பிடித்திருந்தாலும் இந்தியாவில் பலர் தடகளத்தை தேர்வு செய்ய அந்த ஓட்டம் முக்கிய தூண்டுகோளாக அமைந்தது.
1962ஆசிய போட்டி:
1960ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பதக்க வாய்ப்பை தவறவிட்டிருந்தாலும் அதிலிருந்து மீண்டு வந்து ஆசிய தடகள போட்டியில் பங்கேற்றார். இம்முறை 400 மீட்டர் ஓட்டத்தில் மீண்டும் அசத்திய மில்கா சிங் தங்கப்பதக்கம் வென்றார். மேலும் 4*400மீட்டர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்று அதிலும் தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ஆசிய தடகள வரலாற்றில் 4 தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்றா சதனையை படைத்தார்.
சமூக தொண்டு:
தனது ஓய்விற்கு பிறகு பல இளம் வீரர்களை ஊக்குவித்து வந்த மில்கா சிங் 1999ஆம் ஆண்டு கார்கில் போரில் உயிரிழந்த பிக்ரம் சிங்கின் மகனை தத்து எடுத்தார். அவருடைய படிப்பு செலவு ஆகியவற்றை ஏற்றார். அதன்பின்னர் 2003ஆம் ஆண்டு ஒரு அறக்கட்டளையை தொடங்கி பல விளையாட்டு வீரர்கள் மற்றும் மக்களுக்கு உதவிகள் செய்து வந்தார்.
இவருடைய தடகள பயணத்தை பாக் மில்கா பாக் (ஓடு மில்கா ஓடு) என்ற பெயரில் இந்தியில் படமாக்கப்பட்டது. தற்போது நம்மைவிட்டு மில்கா சிங் பிரிந்தாலும் அவரின் சாதனை எப்போதும் போற்றும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ‘சச்சின்,சச்சின் டூ டெஸ்ட் கிரிக்கெட்- 17 வயது சிறுமியின் சாதனைப் பயணம் !