28 வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நாகரில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதிவரை நடந்தது. பிரம்மாண்டமாக தொடங்கிய இந்த தொடரில் மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக இந்தியா சார்பில் யார் யார்  பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது என்று நிபுனர்கள் கூறி இருந்தார்கள். இதில் ஆண்கள் பிரிவில் எச்.எஸ் பிரனாய், காமன்வெல்த் சாம்பியன் லக்‌ஷ்யா சென், பேட்மிண்டன் இரட்டையர் தரவரிசையில் 2 வது இடம் வகிக்கும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி சிராக் ஷெட்டி ஜோடியினர், பெண்கள் பிரிவில் பி.வி.சிந்து ஆகிய இந்திய வீரர்கள் பெயர்கள் இருந்தது.


இரண்டு மணி நேரம் போராடி கிடைத்த வெற்றி


ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அதாவது ஆகஸ்ட் 27ஆம் தேதி  நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் மூன்றாவது இடம் வகிக்கும் தாய்லாந்து வீரர் குன்லாவுத் விதித் சரண் 19-21, 21-18, 21-7 என்ற செட் கணக்கில் கோடாய் நராவ்காவை(ஜப்பான்) வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாகினார். இந்த வெற்றிக்காக அவர் 1 மணி 49 நிமிடங்கள் போராடினார்.  உலக பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கத்தை உச்சிமுகந்த முதல் தாய்லாந்து வீரர் இவர் தான். முன்னதாக இந்திய வீரர் எச்.எஸ் பிரனாய் இவரிடம் அரைஇறுதியில் தோற்று வெண்கலப்பதக்கம் வெற்றது குறிப்பிடத்தக்கது.


முதல் தென் கொரிய சாம்பியன்


பெண்கள் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனை அன் சே யங் (தென்கொரியா) மூன்று முறை உலக சாம்பியனான கரோலினா மரினை (ஸ்பெயின்) இறுதி போட்டியில் எதிர்கொண்டார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நடைபெற்றது. இருப்பினும் சிறப்பாக ஆடிய அன் சே யங், கரோலினா மரியை  வெற்றிக்கு அருகில் நெருங்க விடவில்லை. இதனால்,  21-12, 21-10 என்ற செட் கணக்கில் கரோலினா மரியை வீழ்த்தினார். இதன் மூலம் உலக பேட்மிண்டன் பெண்கள் ஒற்றைய பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற முதல் தென் கொரியா வீராங்கனை என்ற வரலாற்று சாதனையையும் 21 வயதான அன் சே யங் படைத்தார். இந்த ஆண்டில் இவர் வென்ற 8-வது பட்டம் இதுவாகும்.


இரட்டைர் பிரிவில் சீன வீராங்கனைகள் சென் கிங் சென் - ஜியா யிபேன் ஜோடி 21-16, 21-12 என்ற நேர் செட்டில் இந்தோனேசியாவின் அப்ரியானி ரஹாயு - சிதி படிவா சில்வா இணையை வீழ்த்தி தொடந்து 3வது முறையாக தங்கம் வென்ற முதல் பெண்கள் இரட்டையர் ஜோடி என்ற பெருமையை பெற்றனர்.