மும்பை வான்கடே மைதானத்தில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. கடந்த போட்டியில் போராடி தோற்ற கொல்கத்தாவும், தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் ராஜஸ்தானும் கட்டாய வெற்றிக்காக இன்று களத்தில் இறங்கின.
டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் சார்பில் ஆட்டத்தை தொடங்கிய நிதிஷ் ராணாவும், சுப்மான் கில்லும் ஆட்டத்தை தொடங்கினர். கடந்த போட்டியில் டக் அவுட்டாகிய கில் இந்த ஆட்டத்தில் 11 ரன்களை சேர்த்திருந்த நிலையில், ஜோஸ் பட்லரால் ரன் அவுட் செய்யப்பட்டார். இதையடுத்து, திரிபாதி இறங்கினர். நிதிஷ் ராணா நிதானமாக ஆட, திரிபாதி அதிரடியாக ஆட்டத்தை நகர்த்தினார். அணியின் ஸ்கோர் 45 ஆக இருந்தபோது 22 ரன்களை எடுத்திருந்த நிதிஷ் ராணா இளம்வீரர் சக்காரியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறிங்கிய சுனில் நரேன் 1 பவுண்டரியுடனும் 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் மோர்கன் பந்துகள் ஏதும் சந்திக்காத நிலையில், சக நாட்டு வீரரான கிறிஸ் மோரிசால் ரன் அவுட் செய்யப்பட்டார். அடுத்ததாக அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த திரிபாதியும் 26 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் சென்னைக்கு மரண பயம் காட்டிய ரஸல் 9 ரன்களிலும், சென்னை வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய கம்மின்ஸ் 10 ரன்களிலும் வெளியேற தினேஷ் கார்த்திக் மட்டும் பொறுப்புடன் ஆடி 25 ரன்களை குவித்தார். இறுதியில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை எடுத்தது. இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது.