இந்திய அணி கடந்த மாதம் 18-ந் தேதி நியூசிலாந்து அணியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இருப்பினும் அடுத்து இங்கிலாந்துடனான 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணியினர் இங்கிலாந்திலேயே தங்கியுள்ளனர்,


இந்த போட்டித் தொடருக்காக இந்திய அணியினர் தற்போது அங்கு தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் காயம் அடைந்தார். அவருக்கு காயத்தின் தன்மை தீவிரம் அடைந்துள்ளதால் அவர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து, சுப்மான் கில்லிற்கு பதிலாக இலங்கையில் தற்போது விளையாடி வரும் இந்திய வீரர் பிரித்விஷாவை இந்திய அணியில் சேர்த்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. சுப்மான் கில்லின் காயத்தின் தன்மை காரணமாக அவரை அடுத்த 8 வாரத்திற்கு மருத்துவர்கள் ஓய்வு எடுக்க கூறியுள்ளனர். 




இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.  கபில்தேவ் ஏபிபி செய்தியில் நடைபெற்ற ‘வாவ் கிரிக்கெட்’ நிகழ்ச்சியில் கூறியதாவது,


“ இந்திய அணி வீரர்கள் 20 பேர் தற்போது இங்கிலாந்தில் உள்ளனர்.  இந்திய அணியில் சுப்மான் கில் தவிர்த்து தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வாலும், கே.எல்.ராகுலும் உள்ளனர். இவர்கள் தவிர ரிசர்வ் ஆட்டக்காரராக அபிமன்யு ஈஸ்வரன் உள்ளார். இந்த நிலையில் இன்னொரு தொடக்க ஆட்டக்காரரை அணிக்கு அழைப்பது நல்ல நிர்வாகத்திற்கு அழகல்ல. அது ஏற்கனவே அணியில் இருக்கும் தொடக்க வீரர்களை அவமானப்படுத்துவது ஆகும்.




அணியின் தேர்வுக்குழுவிற்கு மதிப்பு அளிக்க வேண்டும். அவர்கள் ஒரு அணியைத் தேர்வு செய்து அனுப்பியுள்ளனர். அந்த அணி நிச்சயம் கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆலோசனையின்பேரிலே தேர்வு செய்யப்பட்டிருக்கும். ஏற்கனவே அணியில் கே.எல். ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் என்ற இரு பெரும் தொடக்க ஆட்டக்காரர்கள் இருக்கும்போது மூன்றாவது தொடக்க ஆட்டக்காரருக்கு அவசியம் என்ன? இது சரியல்ல.


கேப்டன் அணி நிர்வாகத்திடம் நான் கேட்பது என்னவென்றால், தேர்வுக்குழுவிடம் எனக்கு இந்த குறிப்பிட்ட வீரர்கள்தான் வேண்டும் என்று சொல்ல முடியுமா? தேர்வுக்குழுவை மீறி செயல்படுவீர்களா? அவ்வாறு செயல்படுவதாக இருந்தால் தேர்வுக்குழு தேவையில்லையே. கேப்டன் கோலி மற்றும் ரவி சாஸ்திரி இருவரும்தான் பதிலளிக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை இது தவறான வழிகாட்டுதல். தேவையான வீரர்கள் இருக்கும்போது அவர்களை அவமானப்படுத்தக் கூடாது. நீங்கள் ஆதரித்த வீரர்களை நீங்களே இழிவுபடுத்த முடியாது. அவர்கள் மிகப்பெரிய ஆட்டக்காரர்கள். வேறு எந்தவித சர்ச்சையும் தேவையில்லை.” என்றார்.