இந்திய அணியுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஒரு அற்புதமான சவால் என நியூசிலாந்து அணியின்  கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.


இந்தியா நியூசிலாந்து இடையே முதல்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த மாதம் ஜூன் 18ம் தேதி, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற உள்ளது. இது குறித்து சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் ட்விட்டர் பக்கத்தில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேசிய காணொளி வெளியிடப்பட்டுள்ளது. அதில் "இறுதிப் போட்டியில் மோத மிக ஆவலாக உள்ளோம், விராட் கோஹ்லியின் தலைமையிலான அணி கூட மோதுவது மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.


தற்போது உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக வலம் வரும் கேன் வில்லியம்சன் "இறுதி போட்டி வரை முன்னேறி பங்கெடுப்பதில் மகிழ்ச்சி, ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்வதே அதை விட இன்னும் சிறந்த விஷயமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.


இந்திய அணி எப்படி ஆஸ்திரேலியாவுடன் பரபரப்பான டெஸ்ட் தொடரை வென்றதோ, அதே போல் நியூசிலாந்து அணியும் கடுமையாக போராடியே பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இவையே இந்த இரு அணிகள் மத்தியிலான இறுதி போட்டி மீது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளது.



இந்த இறுதி போட்டி குறித்து கருது தெரிவித்துள்ள நியூசிலாந்து அணியின் வேக பந்துவீச்சாளர் நீள் வேக்னர் "இங்கிலாந்து சூழலில் சிறப்பாக பந்துவீசக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தியாவிடம்  இருக்கிறார்கள். "மேக மூட்டமான சூழலில் அவர்களால் பந்தினை ஸ்விங் செய்ய முடியும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.


இந்நிலையில் இறுதி போட்டிக்கு முன்பாக நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. அதனால் பெரும்பாலான நியூசிலாந்து அணி வீரர்கள் இங்கிலாந்து சென்றுவிட்ட நிலையில், இந்திய அணி மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டு பிறகு அங்கிருந்து இங்கிலாந்து செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது...