போஸ்னியா நாட்டின் தலைநகரான சரஜேவாவில் உலக ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டித் தொடரில் 16 வயதே நிரம்பிய இந்திய வீராங்கனை லிந்தோய் சனம்பம் பங்கேற்றார். இளம் வீராங்கனையான லிந்தோய் அபாரமாக ஆடி தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.






உலக ஜூடோ சாம்பியன்ஷிப்பில் இந்தியா தங்கப்பதக்கம் வெல்வது இதுவே முதன்முறை ஆகும். 57 கிலோ எடைப்பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் லிந்தோய் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த வசா அரியைச் சந்தித்தார். 2009ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதன்முறை ஆகும். 18 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் தங்கம் வென்ற லிந்தோய் இந்தியாவிற்கு பெருமை சேர்த்ததற்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். 21 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும், சீனியர் பிரிவிலும் இந்தியா இதுவரை ஜூடோவில் தங்கம் பதக்கம் வென்றது இல்லை.






தங்கப்பதக்கம் வென்ற லிந்தோய் மணிப்பூர் மாநிலம் இம்பால் நகரைச் சேர்ந்தவர். விவசாய குடும்ப பின்னணியைச் சேர்ந்தவர். தங்கம் வென்ற லிந்தோய் பேசும்போது, எனது உணர்வுகளை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்த வெற்றி மூலம் கிடைத்த மகிழ்ச்சியை நான் மட்டுமே அறிவேன் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.






லிந்தோய் இதற்கு முன்பு 2018ம் ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான சப் ஜூனியர் அளவிலான தொடரில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். கடந்தாண்டு நவம்பர் மாதம் சண்டீகரில் நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். கடந்த ஜூலை மாதம் ஆசிய ஜூனியர் ஜூடோ போட்டியில் தங்கம் வென்று அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.