ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று டோக்கியோவில் தொடங்கி உள்ளது. இத்தொடருக்கான பரிசுத்தொகை ரூபாய் 7 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 26 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்ளும் இத்தொடர், இன்று (ஜூலை 25) தொடங்கி ஜூலை 30 வரை நடைப்பெற இருக்கிறது.


ஜப்பான் ஓபனில் இந்தியாவின் பங்கு:


இத்தொடரில் இந்தியாவை சேர்ந்த ’நம்பர் 1’ வீரரான ஸ்ரீகாந்த், ப்ரணாய், லக்‌ஷயா சென், பி.வி.சிந்து மற்றும் சமீபத்தில் கொரியன் ஓபன் பேட்மிண்டனில் வென்ற சிராக் - சாத்விக் இணை, மாளவிகா பான்சோத், ஆகார்ஷி காஷ்யப், எம்.ஆர்.அர்ஜூன்-துருவ் கபிலா, திரிஷா ஜாலி, காயத்ரி உள்ளிட்டோர் களம் காண இருக்கின்றனர்.




இன்றைய போட்டியில் ஜொலித்த இந்திய நட்சத்திரங்கள்: 


இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் மற்றும் தைவானை சேர்ந்த சௌ தியென்-சென் மோதிய ஆட்டத்தில் 21-13, 21-13 என்ற புள்ளிகள் கணக்கில் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார். அடுத்ததாக ப்ரணாய் சீனாவை சேர்ந்த லி ஷிஃபெங்கை 21-17, 21-13 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று 16 ஆவது சுற்றுக்கு முன்னேறி உள்ளார். பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த த்ரீசா ஜாலி- புல்லேலா காயத்ரி கோபிசந்த் இணை, ஜப்பானிய இணையான சயாகா ஹோபரா- சுய்சுவை வென்று அடுத்த ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ஆகார்ஷி காஷ்யப் ஜப்பானை சேர்ந்த அகானே யமகுச்சியிடம் தோல்வியுற்று வெளியேறினார்.




 


ஒரு வருட கால தொடர் சறுக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா சிந்து..?


 




இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியனான சிந்து முன்னதாக தனது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐந்து மாதங்கள் ஓய்வில் இருந்தார். அதன் பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சிந்து, இந்த வருடம் நடைபெற்ற இந்தோனேசிய ஓபன், அமெரிக்க ஓபன் மற்றும் கொரியன் ஓபன் என அனைத்து தொடர்களிலும் தோல்வியையே தழுவினார். இவ்வாறு தொடர் தோல்விகளை சந்தித்து வரும் சிந்து ஒரு ஆண்டு காலமாக பட்டம் எதுவும் வெல்லாததால் புள்ளிப்பட்டியலில் 17ஆவது இடத்திற்கு சென்றுவிட்டார். ஜப்பான் ஓபனில் சிந்து தனது முதல் போட்டியில் சீனாவை சேர்ந்த ஜாங் யிமான் உடன் நாளை மோதுகிறார். இந்த தொடரின் மூலம் சிந்து தன் நீண்ட கால வெற்றி வேட்கையை தணிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. சிந்து இந்த தொடரில் வெற்றியை ருசிப்பாரா..? ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்வாரா..? பொறுத்திருந்து பார்க்கலாம்..!