இந்தியாவிலுள்ள விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பெரும்பாலும் ராணுவம், ரயில்வே மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் போன்றவற்றில் இருப்பதில் வழக்கம். அந்தவகையில் முதல் முறையாக குத்துச்சண்டை வீராங்கனை ஒருவர் முதல் முறையாக இந்திய ராணுவத்தில் இணைய உள்ளார். தற்போது வரை ராணுவத்தில் குத்துச்சண்டை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால் குத்துச்சண்டை வீராங்கனை யாரும் இடம்பெறவில்லை. 


இந்நிலையில் இந்தாண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் குத்துச்சண்டையில் 60 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்ற ஜெயஷ்மின் லம்போரியா இந்திய ராணுவத்தில் பணியாற்ற உள்ளார். இதன்மூலம் இந்திய ராணுவத்தில் இணைந்த முதல் குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமையை பெற உள்ளார். இது தொடர்பாக இந்தி நாளிதழ் ஒன்று செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி இவர் ராணுவத்தில் இணைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 






ஹரியானா மாநிலத்தின் பிவானி பகுதியில் 2001ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி பிறந்தவர் ஜெயஷ்மின் லம்போரியா. பிவானி பகுதி குத்துச்சண்டை போட்டிகளுக்கு பெயர் போன கிராமம் என்பதால் சிறு வயது முதல் ஜெயஷ்மினும் அந்த விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். அத்துடன் விஜயந்தர் சிங் மற்றும் மேரி கோம் ஆகிய இருவரையும் தன்னுடைய ரோல் மாடலாக வைத்து கொண்டு இவர் குத்துச்சண்டை போட்டிகளில் களமிறங்க தொடங்கினார். தன்னுடைய 10 வது வகுப்பு முதல் இவர் குத்துச்சண்டை போட்டிகளில் களமிறங்கி வந்தார். 


இவருடைய குத்துச்சண்டை வாழ்க்கைக்கு தாத்தா போட்ட தடையை உடைத்து குத்துச்சண்டையில் சாதிக்க தொடங்கினார். இவருடைய தாத்தா இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அத்துடன் அவர் ஒரு மல்யுத்த வீரராகவும் இருந்தார். முதலில் ஜெயஷ்மினுக்கு அவருடைய உறவினரான பர்விந்தர் பயிற்சிய அளிக்க தொடங்கினார். பர்விந்தர் 2006ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் குத்துச்சண்டையில் பங்கேற்று இருந்தார். முதலில் அவரிடம் குத்துச்சண்டை பயின்று மாநில அளவிலான போட்டிகளில் வெல்ல தொடங்கினார். 2022ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிக்கான தகுதியில் பர்வின் ஹூடாவை எதிர்த்து விளையாடி வென்றார். இதன்காரணமாக இந்தியா சார்பில் 60 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.  இதைத் தொடர்ந்து நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் அரையிறுதியில் தோல்வி அடைந்தார். எனினும் அரையிறுதியில் தோல்வி அடைந்ததன் மூலம் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார். 


 






இந்திய ராணுவத்தில் உள்ள குத்துச்சண்டை வீரர்கள்:


இந்திய ராணுவத்தில் ஏற்கெனவே அமித் பங்கால், முகமது ஹூசாமுதுதீன் மற்றும் மணீஷ் கௌசிக் ஆகிய குத்துச்சண்டை வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு அடுத்தப்படியாக தற்போது முதல் குத்துச்சண்டை வீராங்கனையாக ஜெயஷ்மின் இடம்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.