ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பிராவோவின் சாதனையை, இந்திய வீரர் யுஸ்வேந்திர சாஹஸ் சமன் செய்துள்ளார். வெறும் 142 போட்டிகளில் அவர் இந்த சாதனையை எட்டியுள்ளார்.
சாஹல் சாதனை:
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வியுற்றாலும், அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர் சாஹல் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். தான் வீசிய நான்கு ஓவர்களில் வெறும் 29 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய, சென்னை அணிக்காக விளையாடிய மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த த்வெயின் பிராவோவின் சாதனையை சமன் செய்துள்ளார். அதன்படி, இருவரும் 183 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
சாஹல் முன்னிலை:
த்வெயின் பிராவோ 161 போட்டிகளில் விளையாடி 183 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், சாஹல் வெறும் 142 போட்டிகளிலேயே இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளார். அதோடு, நடப்பு தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னதாகவே, ராஜஸ்தான் அணிக்கு இன்னும் 3 லீக் போட்டிகள் உள்ளன. எனவே, இந்த தொடரிலேயே ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை, சாஹல் தனதாக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் சாஹல்:
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மூலமாக அறிமுகமானாலும், 2014ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இணைந்த பிறகு தான் அவர் ஜொலிக்க தொடங்கினார். அந்த அணியின் முக்கிய நட்சத்திர பந்துவீச்சாளராகவும் மாறினார். எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்தார். தொடர்ந்து, 2021ம் ஆண்டு வரையில் பெங்களூரு அணிக்காக 113 போட்டிகளில் விளையாடி 139 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால், எதிர்பாராதவிதமாக 2022ம் ஆண்டு பெங்களூரு அணி சாஹலை விடுவித்தது. இதையடுத்து ராஜஸ்தான் அணியில் இணைந்த பிறகும் தனது விக்கெட் வேட்டையை தொடர்ந்தார். அந்த அணிக்காக 28 போட்டிகளில் விளையாடியுள்ள சாஹல், இதுவரை 44 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
அதிக விக்கெட்கள் எடுத்த வீரர்கள்:
ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய முதல் 5 வீரர்களில், த்வெயின் பிராவோ மட்டுமே வேகப்ந்துவீச்சாளர். மற்ற அனைவரும் சுழற்பந்துவீச்சாளர்கள் தான் அதுவும் அவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
01. த்வெயின் பிராவோ - 183 விக்கெட்டுகள், 161 போட்டிகள்
02. யுஸ்வேந்திர சாஹல் - 183 விக்கெட்டுகள், 142 போட்டிகள்
03. பியூஷ் சாவ்லா - 174 விக்கெட்டுகள், 175 போட்டிகள்
04. அமித் மிஸ்ரா - 172 விக்கெட்டுகள், 160 போட்டிகள்
05. அஷ்வின் - 171 விக்கெட்டுகள், 195 போட்டிகள்
பேட்டிங், பந்துவீச்சில் இந்தியர்கள்:
ஏற்கனவே பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் கோலி, அண்மையில் 7000 ரன்களை கடந்து, ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை சேர்த்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதைதொடர்ந்து தற்போது அதிக விக்கெட் வீழ்த்தியவர்களின் பட்டியலிலும் இந்தியரான சாஹல் முதலிடத்தை பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.