இந்தியாவில் கடந்த 15 சீசன்களாக நடைபெற்று வந்த ஆண்களுக்கான ஐ.பி.எல். தொடர் போன்றே மகளிருக்கான டி20 ஓவர் பிரிமியர் லீக் தொடர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மும்பையில் நேற்று முதலாவது மகளிர் பிரிமீயர் லீக் டி20 தொடர் கோலகலமாக தொடங்கியது.
நடிகைகள் க்ரித்தி சனோன், கியாரா அத்வானி ஆகியோரின் சிறப்பு நடனங்களுடன் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இந்த தொடரின் முதல் போட்டி மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் அணி - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில், மும்பை இந்தியன்ஸ் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டெல்லி, பெங்களூர் அணிகள் மோதல்:
மகளிர் பிரிமீயர் லீக் தொடரின் இன்றைய முதல் ஆட்டம் மும்பையில் உள்ள பிரபோர்ன்ஸ் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கியது. ஆட்டத்தில் ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளும் மோதின.
டி20 உலகக்கோப்பையில் 4 முறை ஆஸ்திரேலிய அணிக்கு கோப்பை வென்று கொடுத்த மெக் லானிங் டெல்லி அணிக்கு கேப்டனாக உள்ளார் என்பதாலும் இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீரர் ஸ்மிர்தி மந்தனா பெங்களூர் அணிக்கு கேப்டனாக உள்ளதாலும் இந்த போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
அதை பூர்த்தி செய்யும் வகையில், டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ஷெபாலி வர்மா, கேப்டன் மேக் லேனிங் ஆகியோர் பெங்களூர் அணி பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தனர். அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இதன் காரணமாக, 10 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 105 ரன்களை எடுத்தது டெல்லி.
பட்டையை கிளப்பிய ஜோடி:
ஷெபாலி வர்மா, லேனிங் ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக ஆடியதால், 14 ஓவர்களில் 150 ரன்களை கடந்து டெல்லி அசத்தியது. பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்கள் வீசிய பந்தை நாலா புறமும் சிதறடித்தனர். 14 ஃபோர்களை பறக்கவிட்ட லேனிங், 72 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
அதேபோல, மறுமுனையில் பட்டையை கிளப்பிய ஷெபாலி வர்மா, 4 சிக்சர்களும் 10 ஃபோர்களும் அடித்து பெங்களூரு அணியை திணறடித்தார். இருப்பினும், சதத்தை தவறவிட்ட ஷெபாலி 45 பந்துகளில் 84 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். முதல் பார்ட்னர்ஷிப்பிற்காக இருவரும் சேர்ந்து 162 ரன்களை எடுத்தனர்.
தொடரின் இரண்டாவது ஆட்டத்திலேயே, மிக பெரிய ரெக்கார்டை இருவரும் சேர்ந்து படைத்துள்ளனர். 20 ஓவர்கள் முடிவில், 2 விக்கெட் இழப்புக்கு டெல்லி 223 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என கடின இலக்கை நோக்கி களம் இறங்கியுள்ளது பெங்களூரு.
இதையும் படிக்க: DC-W vs RCB-W: பெங்களூரை துவம்சம் செய்த டெல்லி.! ஷெபாலி, லேனிங் அதிரடியால் 224 ரன்கள் டார்கெட்..!