ஐபிஎல் 15வது சீசன் முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கானதாக அமைந்துள்ளது. பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா, ஆயுஷ் பதோனி, திலக் வர்மா உள்ளிட்ட வீரர்கள் பேட்டிங்கிலும், உம்ரான் மாலிக், யஷ் தயால் உள்ளிட்ட இளம் ஃபாஸ்ட் பவுலர்கள் பவுலிங்கிலும் அசத்துகின்றனர். இந்தியாவை சேர்ந்த இளம் ஃபாஸ்ட் பவுலரான உம்ரான் மாலிக் வேகத்தில் மிரட்டுகிறார். 150 கிமீ வேகத்திற்கு மேல் அசால்ட்டாக வீசுகிறார். இந்திய ஃபாஸ்ட் பவுலர் ஒருவர் 150 கிமீ வேகத்தில் தொடர்ச்சியாக வீசுவது என்பது அரிதினும் அரிதான விஷயம். அதை செவ்வனே செய்கிறார் உம்ரான் மாலிக்.


இந்த சீசனில் இதுவரை 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள உம்ரான் மாலிக், இந்த சீசனில் டாப் 5 அதிவேக பந்துகளில் 3 பந்துகளை வீசி மிரட்டியிருக்கிறார். இந்த சீசனின் அதிவேக பந்து(153.9) ஃபெர்குசன் வீசியது. அதன்பின்னர் 2 (153.3) மற்றும் 3 (153.1) இடங்களில் உம்ரான் மாலிக் இருக்கிறார். 5ம் இடத்திலும் 152.6 வேகத்தில் வீசி உம்ரான் மாலிக்கே இருக்கிறார்.






196 ரன்கள் என்ற மெகா இலக்கை துரத்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி. சுப்மன் கில் கடந்த சில போட்டிகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவரின் பார்ம் அவுட் இன்றும் தொடர்ந்தது. இதனால் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் 7வது ஓவர் வரை நீடித்ததுடன், கில் மற்றும் சஹா இருவரும் முதல் விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்தனர். 22 ரன்கள் எடுத்திருந்த கில், உம்ரான் மாலிக் பந்தில் கிளீன் போலடாக்கி முதல் விக்கெட்டாக நடையை கட்டினார். இதன்பின் வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆரம்பமே அதிரடியாக ஆடினார். 10 ரன்களில் அவர் வெளியேற, அடுத்த வந்த டேவிட் மில்லரும் 17 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதில் ஹார்டிக் மட்டுமே பவுன்சர் பந்தில் கேட்ச் ஆனார். டேவிட் மில்லர் கண் இமைக்கும் நேரத்தில் பந்து சீறிச்சென்று ஸ்டம்பை பதம் பார்த்தது. மில்லர் தன் பேட்டை வீசுவதற்குள் பந்து பாய்ந்து சென்றது, அரக்கத்தனமாக பவுலிங் போடும் வெகு அரிதான இந்திய வீரர் என்ற மனநிலையை ரசிகர்களுக்கு உருவாக்கியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்த ஒப்பனர் விருத்திமான் சஹா 68 ரன்களுக்கு உம்ரான் பந்துவீசிலே நான்காவது விக்கெட்டாக அவுட் ஆனார். அவருக்கும் தன் ஸ்பீடு ட்ரீட்மெண்ட் கொடுத்து ஸ்டம்பை காலி செய்தார் உம்ரான். மில்லர் அவுட் ஆனதற்கு அடுத்த பந்திலேயே அபினவ் மனோகரும் ஸ்டம்ப் அவுட்டாக குஜராத் அணி, ஒரு பவுலரிடம் 5 விக்கெட்களை பறிகொடுத்து பரிதாபமாக நின்றது.






இந்த சீசனில் அனைவரையும் கவர்ந்த ஃபாஸ்ட் பவுலராக உம்ரான் மாலிக் திகழ்கிறார். அதற்கு முக்கிய காரணம், அவர் ஆடும் சன்ரைசர்ஸ் அணியின் ஃபாஸ்ட் பவுலிங் பயிற்சியாளர் டேல் ஸ்டெய்னும் கூட. லைன் & லெந்த்தை பற்றியெல்லாம் கவலைப்படாமல் 'விட்டு ஏறி' என்று உம்ரான் மாலிக்கை அவர் கொம்பு சீவி விட்டிருக்கிறார் என்று செய்திகள் வந்தன. அதற்கேற்றார்போல உம்ரான் மாலிக் விக்கெட் எடுத்துவிட்டு தனது கோச் டேல் ஸ்டெயின் போலவே சிக்னேச்சர் செலிபிரேஷன் செய்தது பலரை கவர்ந்துள்ளது.


தொடக்க வீரர்கள் கில் மற்றும் சாஹா முதல் விக்கெட்டுக்கு 7.4 ஓவர்களில் 69 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டுகளை தேடிக்கொண்டிருந்த சன்ரைசர்ஸ்க்கு விக்கெட் தேடித்தந்தபோது அந்த செலிபிரேஷனை செய்தார். கில் 23 பந்துகளில் 22 ரன்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, 144 கிமீ வேகத்தில் உம்ரான் வீசிய லெங்த் பந்து, கில் அந்த ஷாட்டை ஆடி முடிப்பதற்குள் ஸ்டம்பை தாக்கி சென்றது. உம்ரான் மாலிக் இந்த விக்கெட்டை எடுக்கும்போது, கிரவுண்டில் வேகமாக ஓடி டேல் ஸ்டெய்னின் சிக்னேச்சர் செலிபிரேஷன் ஆன ஃபிஸ்ட்-பம்ப் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஃபிஸ்ட் பம்ப் என்றால் தரையை நோக்கி குத்துவது. ப்ரெட் லீ போன்றவர்கள் கூட இதனை செய்திருந்தாலும் இது ஸ்டெயினின் அடையாளமாக மாறிப்போனது. அவரது பயிற்சியின் கீழ் விளையாடி விக்கெட்டுகளை குவிக்கும் உம்ரான் மாலிக் அதனை பெருமையுடன் ரீக்ரியேட் செய்வது மிகவும் ஆரோக்கியமான விஷயம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.