ஐ.பி.எல். சீசனில் அடுத்த 10 ஆண்டுகளுக்கும் கொல்கத்தா அணியின் ஆலோசகராக தொடர்வதற்கு கெளதம் கம்பீருக்கு ஷாருக்கான் வெற்றுக் காசோலை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கே.கே.ஆர் அணியின் ஆலோசகர்:
கொல்கத்தா அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டுக்கு பிறகு அந்த பொறுப்பிற்கு வருவார் என்ற தகவல் கடந்த சில நாட்களாக வெளியாகி வருகிறது. அதேநேரம் அந்த பொறுப்பிற்கான உத்தரவாதம் இருந்தால் மட்டுமே தான் விண்ணப்பிப்பேன் இல்லை என்றால் விண்ணப்பிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் கம்பீர்.
ப்ளாங்க் செக் வழங்கிய ஷாருக்கான்:
இந்நிலையில் தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளரும், பாலிவுட் சூப்பர் ஸ்டாருமான நடிகர் ஷாருக்கான் கவுதம் கம்பீரை கொல்கத்தா அணியின் ஆலோசகராக வைத்திருக்க விரும்புவதாக கூறியுள்ளார். இச்சூழலில் தான் அடுத்த 10 ஆண்டுகளுக்கு அணியில் ஆலோசகராக இருக்க கவுதம் கம்பீருக்கு ஷாருக்கான் ஒரு வெற்றுக் காசோலையை வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த சீசனில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை மிக சிறப்பாக காம்பீர் வழிநடத்தி வருவதாக ஷாருக்கான் கூறியிருந்தார். கொல்கத்தா அணியும் சிறப்பாகவே விளையாடி வருகிறது. அந்த வகையில் கொல்கத்தா அணி ஆரம்பம் முதலே புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் தான் இருந்து வருகிறது.
இறுதிப் போட்டியில் கே.கே.ஆர்:
இச்சூழலில் தான் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை கொல்கத்தா அணி தோற்கடிக்கும் பட்சத்தில் மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியை காண நடிகர் ஷாருக்கான் தன்னுடைய குடும்பத்தினருடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்துள்ளார். தற்போது தன்னுடைய குடும்பத்தினருடன் போட்டியை பார்த்து வருகிறார் ஷாருக்கான்.