RR vs RCB IPL 2023:ஐபிஎல் தொடரின் இன்றைய 60வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும்  மோதுகிறது.  ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன்சிங் ஸ்டேடியத்தில் தொடங்கியுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் செய்ய  முடிவு செய்தது.


இரு அணிகளுக்கும் இந்த போட்டியில் வென்றால் தான் தங்களது ப்ளேஆஃப் வாய்ப்பில் நீடிக்க முடியும் எனும் படியான நிலையில் மோதின. முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி தன்னுடைய தொடக்கம் இவ்வளவு மோசமாக இருக்கும் என எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். 


ராஜ்ஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஷ்வால் மற்றும் படலர் ரன் ஏதும் எடுக்காமல் தங்களது விக்கெட்டை இழந்தனர். அடுத்து களமிறங்கிய கேப்டன் சாம்சன் மற்றும் ஜோ ரூட் அடுத்தடுத்து ஆட்டமிழக்க போட்டியில் பெங்களூரு அணியின் கரம் ஓங்கியது. அதன் பின்னரும் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணிக்கு ஒற்றை நம்பிக்கையாக இருந்த ஹிட்மயரும் தனது விக்கெட்டையும் இழந்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி 10. 3 ஓவர்களில் 59 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் பெங்களூரு அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 


முதல் இன்னிங்ஸ்


 


முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியின் கேப்டன் பாஃப் டூ பிளசிஸ் மற்றும் விராட் கோலி தொடங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தில் ஈடுபட்டதால் அணிக்கு ரன் சீராக வந்து கொண்டு இருந்தது. பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்த முயற்சித்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தன்னிடம் இருந்த மூன்று சுழற்பந்து வீச்சாளர்களையும் பயன்படுத்தினார். ஆனால் அவருக்கு பவர்ப்ளேவில் பலன் கிடைக்கவில்லை. 


பவர்ப்ளேவிற்குப் பின்னர் அடித்து ஆட ஆரம்பித்த பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன்களில் விராட் கோலி ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஃப் கான் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். அதன் பின்னர் களத்துக்கு வந்த மேக்ஸ்வெல், டூ பிளசிஸுடன் இணைந்து அணியை பலப்படுத்தும் வேலையில் ஈடுபட்டார். இருவரும் இணைந்து பெங்களூரு அணிக்கு ரன்களை குவிக்க தொடங்கினர். குறிப்பாக ம்ஏக்ஸ்வெல் சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வேகபந்து வீச்சாளர்கள் என பார்க்காமல் அனைவரது பந்து வீச்சிலும் பவுண்டரிகளை எடுக்க திட்டமிட்டு அதிரடியாக ஆடி வந்தார். இதனால் பெங்களூரு அணி 13.2 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. 


தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக ஆடிய டூபிளசிஸ் தனது அரைசத்தினை பூர்த்தி செய்தார். அதன் பின்னர் அதிரடியாக ஆடலாம் என அடித்து ஆடிய அவர் 55 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். டூ பிளசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் கூட்டணி 47 பந்தில்  69 ரன்கள் சேர்த்து ஒரு சிறப்பான பங்களிப்பை அளித்தது. 


ஆனால் அதன் பின்னர் ஆடம் ஜாம்பா வீசிய 16வது ஓவரின் முதல் பந்தில் லோம்ரோர் மற்றும் மூன்றாவது பந்தில் தினேஷ் கார்த்திக் அடுத்தடுத்து ஆட்டமிழக்க போட்டியில் ராஜஸ்தான் கரம் ஓங்கியது. ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் பொறுப்புடன் ஆடிவந்த மேக்ஸ்வெல் 30 பந்தில் தனது அரைசதத்தினை எட்டினார். ஆனால் அவரும் டூ பிளசிஸ் போல் அரைசதத்தினை எட்டிய பின்னர் தனது விக்கெட்டை இழந்தார். 


அதன் பின்னர் இணைந்த ராவத் மற்றும் ப்ராஸ்வெல் பெங்களூரு அணியை 150 ரன்களைக் கடக்க வைத்தனர். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணி சார்பில் டூ பிளசிஸ் 55 ரன்களும், மேக்ஸ்வெல் 54 ரன்களும் சேர்த்தனர். ராஜஸ்தான் அணி சர்பில் ஆசிஃப் மற்றும் ஜாம்பா தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.