இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் முழு உடல் தகுதி பெற்றுள்ளதால் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கி காயமடைந்ததால் சிகிச்சை பெற்று கொண்டு ஓய்வில் இருந்த ரிஷப் பண்ட், கிட்டத்தட்ட 15 மாதங்களுக்கு பிறகு கிரிக்கெட் விளையாட இருக்கிறார்.
என்ன ஆனது ரிஷப் பண்ட்-க்கு..?
கடந்த 2022 டிசம்பர் 30ம் தேதி அன்று உத்தரகாண்டில் உள்ள ரூர்க்கிக்கு அருகே நடந்த சாலை விபத்தில் பண்ட் சிக்கி படுகாயம் அடைந்தார். இதன் காரணமாக கிட்டத்தட்ட 15 மாதமாக சிகிச்சை மற்றும் பயிற்சி பெற்றுவந்த ரிஷப் பண்ட் ஐபிஎல் 2024ல் விளையாட முழு உடற்தகுதி பெற்றுள்ளார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதன்மூலம், பண்ட் இப்போது டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடுவதைக் காணலாம். கடந்த சீசனில், டேவிட் வார்னர் அவருக்கு பதிலாக கேப்டனாக நியமிக்கப்பட்டார். இருப்பினும், டெல்லி அணி கடந்த சீசனில் ஒன்பதாவது இடத்தை மட்டுமே பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரசித் கிருஷ்ணா நிலைமை என்ன?
பிரசித் கிருஷ்ணாவைப் பொறுத்தவரை, பிப்ரவரி 23, 2024 அன்று அவரது இடது குவாட்ரைசெப்ஸ் தசைநார் அறுவை சிகிச்சை செய்ததாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. தற்போது அவரை பிசிசிஐ மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது. அவர் விரைவில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) பயிற்சியை தொடங்க இருப்பதால் வரவிருக்கும் ஐபிஎல் 2024 சீசன் 17ல் இவர் விளையாட மாட்டார் என தெரிவித்துள்ளது.
முகமது ஷமி டி20 உலகக் கோப்பையில் இல்லை..?
முகமது ஷமி தனது வலது குதிகால் பிரச்சனைக்காக பிப்ரவரி 26, 2024ல் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில், தற்போது பிசிசிஐ மருத்துவக் குழு அவரை கண்காணித்து வருகிறது. இதன் காரணமாக ஐபிஎல் மற்றும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் ஷமி விளையாட மாட்டார் என நம்பப்படுகிறது. சமீபத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, வங்கதேச அணிக்கு எதிரான தொடருக்கு முன் திரும்ப முடியாது என்று கூறியிருந்தார்.
ரிஷப் பண்ட் கிரிக்கெட் வாழ்க்கை:
26 வயதான ரிஷப் பண்ட் இதுவரை இந்தியாவுக்காக மொத்தம் 33 டெஸ்ட், 30 ஒருநாள் மற்றும் 66 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். பண்ட் தனது கடைசி டி20 சர்வதேச போட்டியை 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் விளையாடினார்.
66 சர்வதேச டி20 போட்டிகளில் ரிஷப் பண்ட் 22.43 சராசரி மற்றும் 126.37 ஸ்ட்ரைக் ரேட்டில் மொத்தம் 987 ரன்கள் எடுத்துள்ளார்.