RCB Ban From IPL 2026: நடப்பாண்டில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடர் காலத்திற்கும் மறக்கவே முடியாத ஒரு தொடராக மாறியுள்ளது. ஆர்சிபி-யின் வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 அப்பாவி ரசிகர்கள் பரிதாபமாக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை நாடு முழுவதும் ஏற்படுத்தியது.
ஆர்சிபி அணிக்கு தடையா?
இந்த விவகாரத்தில் கர்நாடக போலீசார் ஆர்சிபி நிர்வாகிகள் 4 பேரை கைது செய்ததுடன் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகிறது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், இணையத்தில் அரெஸ்ட் கோலி என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியது.
இந்த நிலையில், வரும் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. டாடா ஐபிஎல் 2025 கமண்டெரி என்ற எக்ஸ் பக்கத்தில் ஆர்சிபி அணி அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் பாதுகாப்பு குளறுபடிகளை ஏற்படுத்தியதற்காக தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும், அதற்காக அதிகாரிகள் இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரித்து வருகின்றனர் என்றும் பதிவிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
மேலும், இந்த விவகாரத்தில் ஆர்சிபி அணியை விமர்சித்து வரும் பலரும் ஆர்சிபியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்தி வருகின்றனர். இதனால், ஆர்சிபிக்கு தடை விதிக்கப்படுமா? என்ற கேள்வி ரசிகரகள் மத்தியில் எழுந்துள்ளது.
உண்மையில் ஆர்சிபி அணிக்கு தற்போது வரை ஐபிஎல் தொடரை நடத்தும் பிசிசிஐ-யால் எந்த வித தடையும் விதிக்கப்படவில்லை. மேலும், இந்த விவகாரத்தில் அந்த அணிக்கு எந்தவித அபராதமோ தண்டனையோ விதிக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் ஆர்சிபி அணிக்கு தடை விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவே ஆகும். ஏனென்றால் இது எதிர்பாராத விபத்து என்பதே இதற்கு முக்கிய காரணம்.
முடிவுக்கு வரும் சின்னசாமி மைதானம்:
கூட்டத்தை கட்டுப்படுத்துவது, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது மாநில போலீசாரின் கடமை என்பதால் ஆர்சிபி அணிக்கும், இதற்கும் தொடர்பு இல்லை என்பதாலும் பிசிசிஐ தடை விதிக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் கடுமையான அரசியல் அழுத்தத்திற்கு கர்நாடக ஆளுங்கட்சி ஆளாகியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் மீது பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.
இதனால், இனி ஐபிஎல் போட்டிகள் உள்பட சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை வேறு மைதானத்தில் நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக சித்தராமையாக இன்று அறிவித்தார்.