ஐபிஎல் தொடரில் இன்று தரம்சாலாவில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதும் போட்டி நடைபெற்றது. தரம்சாலாவில் பெய்த மழை காரணமாக இந்த போட்டி டாஸ் போடுவதிலே தாமதமாக தொடங்கியது. இதையடுத்து, 8.30 மணிக்கு இந்த போட்டி தொடங்கியது.
மழையால் தாமதம்:
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து, பஞ்சாப் அணிக்காக பிரியன்ஸ் ஆர்யா - பிரப்சிம்ரன் ஆட்டத்தை தொடங்கினர். இந்த ஜோடி அதிரடியாக ஆடியது. இந்த ஜோடியின் டெல்லி பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. ஓவருக்கு 12 ரன்கள் வீதம் வந்து கொண்டிருந்தது.
பிரித்து மேய்ந்த பிரப்சிம்ரன் - பிரியன்ஷ் ஆர்யா:
தரம்சாலா மைதானம் பேட்டிங்கிற்கு சொர்க்கபுரி என்பதால் இவர்களது ரன்வேட்டைக்கு எந்த தடங்கலும் இல்லை. ஸ்டார்க், சமீரா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், மாதவ் திவாரி என யார் வீசினாலும் ரன்மழை பொழிந்தனர். குறிப்பாக, பிரப்சிம்ரன் சிங் பவுண்டரிகளாக விளாச பிரியன்ஷ் ஆர்யா சிக்ஸராக விளாசினார். அபாரமாக ஆடிய பிரியன்ஷ் ஆர்யா அரைசதம் விளாசினார். அதன்பின்பும் அவரது அதிரடி தொடங்கியது.
இந்த முனையில் அபாரமாக ஆடிய பிரப்சிம்ரன் அரைசதம் விளாசினார். அப்போது, இந்த ஜோடியை நடராஜன் பிரித்தார். அவரது வேகத்தில் பிரியன்ஷ் ஆர்யா 34 பந்துகளில் 5 பவுண்டரி 6 சிக்ஸருடன் 70 ரன்கள் எடுத்து அவுட்டானார். அப்போது ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கிய நிலையில் மைதானத்தின் ஒரு புறம் மின்விளக்குகள் திடீரென பழுதானதால் போட்டி மைதானத்தின் ஒரு பகுதி வெளிச்சமில்லால் இருளில் மூழ்கியது. பின்னர், பழுது சரிசெய்யப்படாத காரணத்தால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ரத்தான போட்டி:
இதையடுத்து, மைதானத்தை பார்வையிட்ட நடுவர்கள் போட்டியை கைவிடுவதாக அறிவித்தனர். இதனால், டெல்லி அணிக்கும், பஞ்சாப் அணிக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டது. பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளும், டெல்லி அணி 14 புள்ளிகளும் பெற்றது. இந்த போட்டி கைவிடப்பட்டதால் டெல்லி அணிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சிக்கலில் டெல்லி:
டெல்லி அணி அவர்களுக்கு எஞ்சிய 2 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய இயலும். அவர்களுக்கு மீதமுள்ள 2 போட்டிகளும் மும்பை மற்றும் குஜராத் அணிகளுடன் என்பதால் சவால் காத்துள்ளது. பஞ்சாப் அணி 16 புள்ளிகளை எடுத்துள்ளதால் அவர்களது ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது. அதேசமயம் இந்தியா - பாகிஸ்தான் சண்டை காரணமாகவே போட்டி நிறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.