சென்னை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றிபெற்றதற்கு பிறகு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இரண்டாவது இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. 


குஜராத் டைட்டன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் முறையே நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் இருக்கின்றன. தொடர்ந்து ஏழாவது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் முறையே எட்டு, ஒன்பது மற்றும் பத்தாவது இடங்களில் உள்ளன.




ஆரஞ்சு கேப் : 


பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான் மூன்று போட்டிகளில் 225 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதேபோல் டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் டேவிட் வார்னர் 4 போட்டிகள் விளையாடி 209 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.


ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஜாஸ் பட்லர் 4 போட்டிகளில் விளையாடி 204 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும்,  சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் 4 போட்டிகளில் 197 ரன்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர். தொடர்ந்து பெங்களூரு அணி கேப்டம் ஃபாப் டு பிளிசி 3 போட்டிகள் விளையாடி 175 ரன்களுடன் 5 இடத்தில் உள்ளார். 



பர்பிள் கேப் : 


ராஜஸ்தான் பந்துவீச்சாளர்  யுஸ்வேந்திர சாஹல் 4 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவரது அடுத்த படியாக லக்னோ பந்துவீச்சாளர் மார்க் வுட் 3 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்கள் எடுத்து இரண்டாவது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சாளர் 3 போட்டிகளில் 8 விக்கெட்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர். 



தொடர்ந்து, அணியின் துஷார் தேஷ்பாண்டே 4 போட்டிகளில் 7 விக்கெட்டுகளுடன் 4வது இடத்திலும், ராஜஸ்தான் வீரர் அஷ்வின் 4 போட்டியில் 6 விக்கெட்டுகளுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.


இன்றைய போட்டிகள்:


ஐபிஎல் 16வது சீசனின் 18வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத்  டைட்டன்ஸ் அணிகள் பிசிஏ ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இடம் பிடிக்கும். 


ஏற்கனவே ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி தனது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றிபெற்றது. தொடர்ந்து, கொல்கத்தா அணிக்கு எதிரான கடைசி போட்டியில் தோல்வியை தழுவியது. 


அதேபோல், பஞ்சாப் அணியை பொறுத்தவரை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான தொடக்க இரண்டு போட்டிகளில் வென்றது. ஆனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் தோல்வியை சந்தித்தது. 


இந்தநிலையில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இதுவரை நேருக்கு நேர் மோதிய விவரங்களை பார்க்கலாம். 


நேருக்கு நேர்:


பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இதுவரை 2 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில், இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளன. இவர்கள் மோதிய இரண்டு போட்டிகளிலும் இரண்டாவது பேட்டிங் செய்த அணியே வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.