PBKS Vs DC, Highlights: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சாம் கரன் அரைசதம் விளாசி, பஞ்சாப் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.


அதிரடியான தொடக்கம்:


மொகாலியில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 174 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி தவான் 22 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான பேர்ஸ்டோ 9 ரன்களில் நடையை கட்டினார். இதன் மூலம், 42 ரன்களை சேர்ப்பதற்குள் பஞ்சாப் அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.


அரைசதம் விளாசிய சாம் கரன்:


இதையடுத்து இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் 26 ரன்களில் சேர்த்து ஆட்டமிழந்தார். அதைதொடர்ந்து வந்த ஜிதேஷ் சர்மா, 9 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து 5வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த சாம் கரன் மற்றும் லிவிங்ஸ்டோன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டனர். லிவிங்ஸ்டன் நிதானமாக ரன் சேர்க்க, சாம் கரன் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினார். இதன் மூலம், ஐபிஎல் தொடரில் தனது நான்காவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இந்த கூட்டணியை பிரிக்க முடியாமல் டெல்லி அணி பந்துவீச்சாளர்கள் தடுமாறினர்.


பஞ்சாப் அணி அபார வெற்றி:


அதிரடியாக விளையாடி வந்த சாம் கரன் 63 ரன்களை சேர்த்து இருந்தபோது கலீல் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த ஷஷங்க் சிங் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதனால் 167 ரன்களை சேர்ப்பதற்குள் பஞ்சப் அணி 6 விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் லிவிங்ஸ்டன் பொறுப்புடன் விளையாடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 38 ரன்களை சேர்த்தார். இதன்மூலம், 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை சேர்த்து, பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


முதல் இன்னிங்ஸ் சுருக்கம்:


டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ்20 ரன்களிலும்,  டேவிட் வார்னர்  29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து வந்த வீரர்களில் கேப்டன் ரிஷப் பண்ட் 18 ரன்களிலும், ரிக்கி புய் வெறும் 3 ரன்களிலும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். சாய் ஹோப் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 33 ரன்கள் சேர்த்தார். இறுதியில் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய, போரல் கடைசி ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்களை விளாசி அதகளப்படுத்தினர். மொத்தத்தில் 9 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உட்பட 31 ரன்களை விளாசினார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி  9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை சேர்த்தது. அந்த இலக்கை பஞ்சாப் அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியது.