IPL Dhoni Retirement: ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஐபிஎல் தொடர் வந்தாலே கடந்த சில ஆண்டுகளாகவே தோனி எப்போது ஓய்வு பெறுகிறார்? என்ற கேள்வியும், தோனி இந்தாண்டுடன் ஓய்வு பெறுகிறார்? என்ற வதந்தியும் சேர்ந்து கொள்கிறது. 


தோனி ஓய்வா?


இந்த நிலையில், நடப்பாண்டில் சென்னை அணி தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வரும் நிலையில் தோனியின் ப்ளேயிங் லெவன் மற்றும் தோனியின் பேட்டிங்கும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தோனி இந்த தொடரின் பாதியில் இருந்தே ஓய்வு பெறுகிறார்? என்ற வதந்தியும் பரவியது. 


மனம் திறந்த தோனி:


இந்த நிலையில், ஓய்வு குறித்து தோனி பேசியது தற்போது வெளியாகியுள்ளது. ராஜ் சமானியுடன் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் தோனி பேசியதாவது, இப்போதைக்கு ஓய்வு இல்லை. நான் இப்போதும் ஐபிஎல் விளையாடுகிறேன். அதைத் தொடருவேன். இன்னும் ஓராண்டு காலம் ஆகும். எனக்கு தற்போது 43 வயதாகிறது. வரும் ஜுலையுடன் 44 வயதாகிறது. இன்னும் ஓராண்டு காலம் விளையாடுவது குறித்து முடிவெடுக்க இன்னும் 10 மாதங்கள் இருக்கிறது. 


ஓய்வு குறித்து நான் முடிவெடுக்க முடியாது. உங்களுடைய உடல் உங்களால் என்ன முடியும்? என்ன முடியாது? என்பதை தீர்மானிக்கும். இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே எனது கவனம் உள்ளது. 8 முதல் 10 மாதங்களுக்கு பிறகு ஓய்வு குறித்து பார்க்கலாம். 


இவ்வாறு தோனி பேசியுள்ளார். 


மகேந்திர சிங் தோனி கடந்த 2004ம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக ஆடினார். பின்னர், 2020ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனாலும், ஐபிஎல் தொடரில் தொடர்ந்து ஆடி வருகிறார். 2008ம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வரும் அவர் இடையில் சிஎஸ்கே தடைபட்ட காலத்தில் புனே அணிக்காக ஆடினார். பின்னர், மீண்டும் சென்னை அணிக்காக கேப்டனாக திரும்பிய அவர் தற்போது ருதுராஜ் தலைமையில் அன்கேப்ட் வீரராக ஆடி வருகிறார். 


தொடர் விமர்சனம்:


சென்னை அணிக்காக 5 முறை கேப்டனாக இருந்து கோப்பையைப் பெற்றுத் தந்த பெருமை தோனிக்கு உண்டு. ஆனால், நடப்பு சீசனில் சென்னை அணியின் மோசமான ஆட்டத்தால் தோனி மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. 


மேலும், தோனியின் பெயரை கூறி கள்ளச்சந்தையிலும் அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 43 வயதான தோனி இதுவரை 268 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 5 ஆயிரத்து 319 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 24 அரைசதங்கள் அடங்கும்.