ஐபிஎல் என்றாலே ஐபிஎல் ரசிகர்களுக்கு நியாபகத்திற்கு வருவது பரபரப்பும் விறுவிறுப்புமாகத்தான் இருக்கும். ஒரு ஓவரில் போட்டியை ஒரு அணி தன் வசத்திற்கு கொண்டு வந்தால் அடுத்த ஓவரில் எதிரணி போட்டியை முற்றிலுமாக தன் கைகளுக்கு கொண்டுவந்து விடும். இப்படியான விறுவிறுப்பு பரபரப்பும் நிறைந்த டி20 கிரிக்கெட் தொடர் மற்ற நாடுகளில் நடக்கும் டி20 லீக் கிரிக்கெட் போட்டிகளை விடவும் அதிகப்படியான ரசிகர்களைக் கொண்ட லீக் கிரிக்கெட்டாக மாறி உள்ளது.
டி20 கிரிக்கெட்டில் ரசிகர்களை குஷியடையச் செய்வது சிக்ஸர்களும் ஸ்டெம்புகளை பறக்கவிடும் போல்டுகளும்தான் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும். இப்படி இருக்கும்போது உலக கிரிக்கெட் அரங்கில் சிக்ஸார்கள் விளாசும் வீரர்கள் என்றால் அதற்கு பெயர் பெற்ற வீரர்களாக இருப்பது வெஸ்ட் இண்டீஸ் வீரர்களாகத்தான் இருப்பார்கள். ஐபிஎல்-இல் களம் காணும் அணிகள் தங்களது அணியில் குறைந்த பட்சம் ஒரு வெஸ்ட் இண்டீஸ் வீரராவது இருக்க வேண்டும் என நினைப்பது உண்மைதான்.
என்றாலும், ஐபிஎல் கிரிக்கெட்டில் சிஸ்சர் விளாசும் வீரர் என்ற கேள்வியை ஐபிஎல் ரசிகர்கள் முன்னிலையில் வைத்தால் பெரும்பாலானவர்கள் பதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியைத்தான் கூறுவார்கள். அதற்கு காரணம் தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் தோனி செய்த சம்பவங்கள் அப்படி. குறிப்பாக சேஸிங்கில் தோனி களத்தில் நிற்கின்றார் என்றால் பந்துவீச்சாளருக்கு தானாகவே ஒருவித பதற்றம் ஏற்பட்டு விடும். பந்து வீச்சாளர் யார்க்கர் வீசினால் அதனை துல்லியமாக கணித்து தனது ஹெலிகாப்டர் ஷாட் மூலம் சிக்ஸர்களை மிட் ஆன் மற்றும் மிட் ஆஃப் திசையில் பறக்க விடுவார்.
சிக்ஸர்களை பறக்கவிடுவதில் தோனி வல்லவர் என்றால் அது ஏதோ வாய் வழி வந்த வார்த்தைகள் அல்ல. அது முழுக்க முழுக்க அவர் பறக்கவிட்ட சிக்ஸர்களால் அவர் தன்னை சுற்றி ஏற்படுத்திக்கொண்ட ரசிகர்கள் பட்டாளத்தின் சாம்ராஜ்ஜியம். ஐபிஎல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து தோனி ஐபிஎல் விளையாடி வருகின்றார். இதில் இரண்டு வருடங்கள் மட்டும் சென்னை அணியின் உரிமம் ரத்து செய்யப்பட்டதால், புனே அணிக்காக வீரராக களமிறங்கினார்.
தோனியைப் பொறுத்தவரை இதுவரை 250 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் 218 முறை பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளார். இதுவரை அவர் 239 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். இதில் கடைசி ஓவரான 20வது ஓவரில் மட்டும் 59 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 20வது ஓவரில் அதிக சிக்ஸர்கள் விளாசியவர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக பொல்லார்ட் 33 சிக்ஸர்கள் விளாசி இரண்டாவது இடத்தில் இருந்தாலும், பொல்லார்ட் தற்போது ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.
மூன்றாவது இடத்தில் 29 சிக்ஸர்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஜடேஜா உள்ளார். நான்காவது இடத்தில் ஹர்திக் பாண்டியா 26 சிக்ஸர்களுடன் உள்ளார். ஐந்தாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஓப்பனர் ரோகித் சர்மா 23 சிக்ஸர்களுடன் உள்ளார்.